பாராளுமன்றத்திற்கு மாட்டுவண்டியில் வந்தவர்களுக்கு இடையூறு - விசாரிக்க ரணில் உத்தரவு
நாடாளுமன்றத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட உரையில் பங்கேற்பதற்காக, மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிதிவண்டியில் வந்தனர். தினேஸ் குணவர்த்தன மாட்டு வண்டியில் வந்தார்.
அதேவேளை, மிதிவண்டியிலும் மாட்டு வண்டியிலும் நாடாளுமன்றத்துக்கு வந்த தம்மை காவல்துறையினர் தடுத்தனர் என்றும், நாடாளுமன்றத்துக்கு வரும் சுதந்திரத்தை காவல்துறையினர் தடுக்க முடியாது என்றும் தினேஸ் குணவர்த்தன கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, காவல்துறையினர் ஏற்படுத்திய இடையூறு தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.
நாடாளுமன்ற வளாகம் வரை ஆடம்பர வாகனங்களில் வந்து, கூட்டு எதிரணி உறுப்பினர்கள், சுமார் ஒரு கி.மீ வரையே மிதிவண்டியிலும் மாட்டு வண்டியிலும் பயணம் செய்தனர்.
அவர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்ததும், அவர்களின் ஆடம்பர வாகனங்கள் நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன.
மிதிவண்டிகளை, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாவலர்கள், உதவியாளர்கள் எடுத்துச் சென்றனர்.
மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிதிவண்டியில் வந்த போது, அவர்களின் பாதுகாவலர்கள் அவர்களுக்குப் பின்னால் ஒடிவந்து கொண்டிருந்தனர்.
Post a Comment