மைத்திரியை விமர்சித்த சுஜீவ, பதவி பறிக்கப்படுமா..?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கடுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தினாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நீதி மற்றும் தொழிலுறவுகள் பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்கவின், பிரதியமைச்சர் பதவியைப் பறிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில், தான் கடுமையான அதிருப்தி கொண்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, “சிலருடைய தேவைகளுக்காக, ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் அரசியல்வாதிகளை சின்னாபின்னமாக்குவதற்கு, ஜனாதிபதி பங்குதாரராக இருக்கக்கூடாது” என்றும் கேட்டுக்கொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், கடந்த 21ஆம் திகதியன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.
பிரதியமைச்சரின் குற்றச்சாட்டுத் தொடர்பில் கடும் அதிருப்தி கொண்ட, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள், இந்த விவகாரம் தொடர்பில், கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கும் கட்சியின் தவிசாளர் அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவின் கவனத்துக்கும் கொண்டுவந்தனர்.
இந்நிலையிலேயே, அவருக்கு எதிராக, கட்சி மட்டத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு, ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது. அவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு அழைப்பதற்கு முன்னர், பிரதியமைச்சர் பதவியை, சுஜீவ சேனசிங்கவிடமிருந்து பறிப்பதற்கும் ஆலோசிக்கப்பட்டுவருவதாக அறியமுடிகின்றது. பிரதியமைச்சரின் பதவியைப் பறிக்கும் அதிகாரம், ஜனாதிபதி கைகளில் இருப்பதால், ஜனாதிபதியே அதுதொடர்பில் தீர்மானமொன்றை எடுக்கவேண்டுமென, அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
எது எவ்வாறோ, நிக்கவரெட்டிய பிரதேசத்தில், நேற்று (24) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “ஊழல், மோசடிக்கு எதிராகத் தீர்மானங்களை எடுக்கும் போது, அதற்கு எதிராகவும் எனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமாயின், சகல பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு, மக்களுடன் கைகோர்த்து முன்னோக்கிப் பயணிப்பதற்கு நான் தயார்” எனத் தெரிவித்திருந்தார்.
“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம், தவறு செய்தமையால் தான், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் 2015ஆம் ஆண்டு தோல்வியடைந்தார். இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டே, அவ்வாறான பிழைகளை செய்துகொண்டு மற்றும் குறைபாடுகளுடன் செயற்பட்டார்கள் எனின், மக்கள் அதனை அனுமதிக்கமாட்டார்கள்”என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கௌரவ ஜனாதிபதி அவர்களே!, இப்போதுள்ள நமது நாட்டின் நிலைமை கருதி நீங்கள் மிக விவேகமாகவும் அதிவேகமாகவும் செயல்படவேண்டிய நேரமிது. உங்களுக்கு முழு ஆட்சியுரிமையுமிருந்தும் நீங்கள் அதனை பயண்படுத்தாமலிருப்பதால்தான் நாட்டின் பலப்பக்கமும் நெருக்கடியான நிலைமை உருவாகிறது.
ReplyDelete