முஸ்லிம்களின் அச்சத்தை, அரசாங்கம் போக்குமா..??
காலியின் கிந்தோட்டை பிரதேசத்தில் முஸ்லிம்களை இலக்கு வைத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தென் மாகாண முஸ்லிம்களை மாத்திரமன்றி முழு இலங்கை முஸ்லிம்களையும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவம் ஒன்றை இனங்களுக்கிடையிலான முறுகலாகவும் மோதலாகவும் மாற்றுமளவுக்கு இரு தரப்பிலும் தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன.
இரு சமூகங்களையும் சேர்ந்த பொறுப்புணர்ச்சியற்ற இளைஞர்கள் சிலர் தமக்கிடையில் முரண்பட்டுக் கொண்டமையானது, இப் பகுதியில் இனவாதத்தைத் தூண்டி முஸ்லிம்களைக் கருவறுக்கத் தருணம் பார்த்திருந்த சக்திகளுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்பதே கசப்பாயினும் உண்மையாகும்.
கடந்த 2014 ஆம் ஆண்டு அளுத்கமவில் இடம்பெற்ற பாரிய வன்முறைகளுக்கு அடுத்ததாக இடம்பெற்ற குறிப்பிடத்தக்க வன்முறைச் சம்பவமாக 2017.11.17 அன்று காலி மாவட்டத்தின் கிந்தோட்டை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
எவ்வாறு அளுத்கமவில் பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் பார்த்திருக்க அளுத்கமவில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டனவோ, அதேபோன்றுதான் கிந்தோட்டையிலும் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்புடன் இனவாதிகள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் படையினரின் ஒத்துழைப்புடன் அளுத்கமவில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டது போன்று, கிந்தோட்டையிலும் பாதுகாப்பு படையினரின் பிரசன்னம் திட்டமிட்டு குறைக்கப்பட்டே இத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதற்கான சாட்சியாக அப் பகுதி வாழ் முஸ்லிம் மக்கள் உள்ளனர். அப்படியானால் பதற்றமும் அச்சமும் நிலவிய அப் பகுதியிலிருந்து முன்னறிவித்தலின்றி பாதுகாப்பை விலக்குவதற்கான உத்தரவை வழங்கியது யார்? அரசியல்வாதிகளா அல்லது பாதுகாப்பு அதிகாரிகளா என்பது கண்டறியப்பட வேண்டும்.
கடந்த அரசாங்கத்தில் அரசியல்வாதிகளும் பாதுகாப்பு உயரதிகாரிகளும் இனவாதக் கண்ணோட்டத்தில் நடந்து கொண்டதன் காரணமாகவே இலங்கை வாழ் முஸ்லிம்கள் முன்னைய ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பினர். அதுமாத்திரமன்றி தற்போதை ஆட்சியாளர்கள் தேர்தல்களில் வழங்கிய வாக்குறுதிகளை நம்பியே முஸ்லிம்கள் நல்லாட்சி அரசொன்றை தாபிக்க வாக்களித்தனர்.
துரதிஷ்டவசமாக இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் இவ்வாறானதொரு கறை படிந்த சம்பவம் தென் மாகாண முஸ்லிம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் எந்தவொரு அரசாங்கத்தினாலும் முஸ்லிம்களின பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க முடியாது எனும் அவநம்பிக்கையும் அச்சமும் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கிந்தோட்டை பிரதேசத்திற்கு கடந்த சில தினங்களாக விஜயம் செய்த பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களிடம் முஸ்லிம்கள் இந்தக் கருத்தையே திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றனர்.
எனவேதான் தற்போதைய அரசாங்கம் அரசியல்வாதிகள் மத்தியிலும் பாதுகாப்பு தரப்பினர் மத்தியிலும் உள்ள இனவாத சிந்தனை கொண்டவர்களை இனங்கண்டு அவர்களை பதவி நீக்கம் செய்யவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும். அதன் மூலமே எதிர்காலத்திலும் இவ்வாறான வன்முறைகள் ஏனைய பகுதிகளுக்கும் பரவாது தடுக்க முடியும். இன்றேல் அன்று அளுத்கம, இன்று கிந்தோட்டை, நாளை எங்கே? எனும் முஸ்லிம்களின் அச்சத்தை எவராலும் போக்க முடியாது போய்விடும்.
விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிhயர் தலையங்கம்
விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிhயர் தலையங்கம்
Post a Comment