Header Ads



வறுமையை வளர்த்த, சிங்கள பௌத்த மேலாதிக்கம்

‘அரசியற் கட்சிகளின் பதில்களை இடைக்கால அறிக்கையில் உள்ளடக்குவதென நாங்கள் தீர்மானித்துள்ளோம். இதன்மூலம் இது தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வதற்கு முன்னர் அரசியற் கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அறிக்கை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதில்லை’ என சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

பிரதமர் தெரிவித்த கருத்து சரியானதே. பரிந்துரைக்கப்பட்டுள்ள அரசியல் யாப்புத் தொடர்பாக ஒரேயொரு திட்ட வரைவே காணப்படுகிறது. அரசியலமைப்பு வரைவு என ஒன்றுமில்லை. இக்கட்டமைப்புத் தீர்மானத்திற்கு உள்ளே பரிந்துரைக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரையறுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு இருக்கவேண்டும்  என்கின்ற அவசியமுமில்லை.

21 உறுப்பினர்களைக் கொண்ட வழிநடத்தல் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் எண்ணக்கருக்கள் தொடர்பாக தீவிர  சமூக கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான அரசியற் தலைமையை சிறிலங்கா அரசாங்கம் வழங்க வேண்டிய பொறுப்பையும் கடமையையும் கொண்டுள்ளது.

சிறிலங்காவின் கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்த்தன, பிரசன்னா ரணதுங்க ஆகியோரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான நிமால் சிறிபால டீ சில்வா, சுசில் பிறேமஜயந்த மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

கூட்டு எதிர்க்கட்சியைப் பொறுத்தளவில் அரசியலமைப்புத் தொடர்பான சட்டவரைவை எதிர்க்கக்கூடிய தார்மீக உரிமையைக் கொண்டிருக்கவில்லை. கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்த்தன மற்றும் பிரசன்னா ரணதுங்க ஆகியோர் இச்சட்டவரைவை ஏற்றுக்கொண்டனர். மக்களைத் தவறாக வழிநடத்தும் உரிமையை கூட்டு எதிர்க்கட்சியினர் கொண்டிருக்கவில்லை.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தளவில் நிறைவேற்று அதிபர் முறைமை தொடர்பான தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் பரப்புரையின் போது வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம், தனது முதலாவது ஆட்சிக் காலத்துடன் அதிபர் பதவியிலிருந்து விலகவேண்டும். ஆனால்  இவர் 2020ல் நடக்கவுள்ள அடுத்த அதிபர் தேர்தலிலும் பிரதம வேட்பாளராகப் போட்டியிடலாம்.

அடுத்த அதிபர் எவ்வாறு தெரிவுசெய்யப்படுவார் என்பதில் ஏற்படவல்ல பிரச்சினையை இவர் தீர்க்க விரும்புகிறார். அடுத்த அதிபர் நாடாளுமன்றத்திலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என இவர் நிச்சயமாக விரும்பலாம். இதன் மூலம் மீண்டுமொரு முறை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அரசியல் உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்ளலாம் என இவர் கருதுகிறார்.

அடுத்த பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி வகிப்பதன் மூலம் இவர் தனது பிரதமர் பதவியை மேலும் பலப்படுத்திக் கொள்வதன் மூலம் மட்டுமே அதிபர் பதவியானது மேலும் சீரமைக்கப்படுவதற்கான சாத்தியம் ஏற்படும்.

தேர்தல்களுக்கு முகங்கொடுப்பதென்பது சிறிசேனவிற்கு ஒரு இக்கட்டான சூழலாகக் காணப்படுகிறது. 2015 அதிபர் தேர்தலில் இடம்பெற்றது போன்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அதிபர் வேட்பாளரை அதே கட்சியைச் சேர்ந்த பிறிதொரு அதிபர் வேட்பாளர் போட்டியிட்டது போன்று மீண்டும் அதிபர் தேர்தலில் சிறிசேனவால் போட்டியிட முடியாது.

2015 ஆகஸ்ட் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பதற்கு சிறிசேனவே தடையாக இருந்தார் என சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் கருதுகின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 95 ஆசனங்களைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஐ.தே.கவின் நாடாளுமன்ற ஆசனங்களை 100 இலிருந்து குறைத்து தமக்கான பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியை அமைத்திருக்கும். ஆனால் இதற்கு சிறிசேனவே தடையாக இருந்ததாக நோக்கப்படுகிறது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி பெற்றிருக்கக் கூடிய இந்த வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கு சிறிசேன தடையாக இருந்ததால் மீண்டுமொரு தேர்தலில் இவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடுவது சிரமமானதாக இருக்கும்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐ.தே.கவின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்கள பௌத்த வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகச் செயற்படுகின்றனர்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை, மழுங்கடிக்கும் செயற்பாடுகளில் ஐ.தே.கவினர் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனோர் பணியகத்தை இயங்கச் செய்வதையும் தாமதப்படுத்தி வருகின்றனர்.  எவ்வித குற்றங்களுமின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுவிப்பதற்கும் ஐ.தே.க தலைமை எந்தவொரு தலையீட்டையும் காண்பிக்கவில்லை.

சுருக்கமாகக் கூறில், அதிபர் சிறிசேனவின் சிங்கள பௌத்த ‘போர்க் கதாநாயகர்கள்’ அரசியலிற்கு ஐ.தே.கவும் ஆதரவளித்துள்ளது. இதனால் இக்கட்சியானது சிங்கள பௌத்த அதிகாரத்துவத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையிலுள்ளது.

2015ல் ராஜபக்சவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அதிபர் தேர்தலில் தமிழ் முஸ்லீம் வாக்குகள் கிடைத்தது போன்று அரசியலமைப்பு வாக்கெடுப்பிலும் தமக்கு ஆதரவாக வாக்குகள் அளிக்கப்படும் என ஐ.தே.க கருதுகின்றது.

தென்னிலங்கை சிங்கள மக்களுடன் தொடர்பை ஏற்படுத்தாது தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மருட்சியான முயற்சியானது புதிய அரசியலமைப்பை எதிர்ப்பதற்கு தலைமை தாங்குவதற்கு ராஜபக்சவிற்கு அனுமதியளித்துள்ளது.

அவர்கள் தற்போது வெறுமையான மைதானத்தில் உள்ளனர். இதனால் அவர்கள் தமது பந்தை தமக்கு விரும்பிய எந்தத் திசையிலும் அடிக்க முடியும். இதேபோன்று இந்த ஆட்டத்தில் தமக்கு விருப்பமான கோல் கீப்பர்கள், நடுவர்கள், ஆரவாரிக்கும் தலைவர்களைத் தெரிவு செய்யக் கூடிய நிலையில் ராஜபக்ச தரப்பினர் உள்ளனர்.

தற்போது இந்த மைதானமானது ராஜபக்சவின் ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டப் பேரணிகளில் நிரம்பி வருகிறது. புதிய அரசியலமைப்பு எதிர்த்து ராஜபக்ச தரப்பினர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். புதிய அரசியலமைப்பு எதிர்க்கும் பௌத்த குருமார்கள், கல்விமான்கள் போன்ற பலதரப்பட்டவர்களையும் ராஜபக்ச தரப்பு தன்னுடன் இணைத்து வருகின்றது.

இப்புதிய அரசியலமைப்பானது நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்துவதாகவும் சிங்கள போர் வீரர்கள் எதிர்கால சந்ததிகளுக்காக இந்த நாட்டைப் போரிட்டு மீட்டுள்ளனர் எனவும் ராஜபக்ச தரப்பினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தமிழ்- முஸ்லீம் மக்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கில் மட்டுமல்லாது, பௌத்த சிங்களவர்கள் வாழும் தெற்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் சமஸ்டி நிர்வாக முறைமை வழங்கப்படும் போது அங்கு வாழும் மக்கள் தமது சொந்த நலன்களைக் கருத்திற் கொண்டு தம் சார்ந்த தீர்மானத்தை தாமாக எடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பார்கள். இந்த மக்களின் சொந்த நலன்களைக் கருத்திற் கொண்டு இந்த மாகாணங்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக நிற்கிறோம்.

‘ஒன்றுபட்ட’ சிங்கள பௌத்த தேசம் என்ற பெயரில் 70 ஆண்டுகளாக அதிகாரத்துவமானது மத்தியில் குவிந்திருந்தமையால் சாதாரண சிங்கள பௌத்த மக்களும் சராசரி மனித வாழ்வை வாழ்வதில் இடர்களை எதிர்நோக்குகின்றனர். சிறிலங்காவின் கிராமங்களில் வாழும் 70 சதவீதமான மக்களின் வாழ்வியலை ஒன்றுபட்ட சிங்கள பௌத்த தேசம் தொடர்ச்சியாக அளித்துள்ளது.

சிங்கள பௌத்தம் என்ற பெயரால், இந்தத் தலைவர்கள் மிக மோசமான இலஞ்ச ஊழல்கள், பொது நிர்வாகம் மற்றும் சட்ட அமுலாக்கலை அரசியல் மயப்படுத்தியமை, கிராமியப் பொருளாதாரத்தை நகர்ப்புற வாழ்வின் ‘இழிந்த பணத்திற்காக’ அழித்தமை போன்ற மோசமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

2016 ஜூன் மாதம் வெளியிடப்பட்ட சமூக-பொருளாதார தகவல் தொடர்பான CBSL அறிக்கையில், மேல் மாகாணத்தில் வாழும் நபர் ஒருவரின் சாராசரி வருமானமானது ரூபா 42,100 ஆகவும் தென் மாகாணம் – ரூபா 28,921, ஊவா ரூபா 24,228 மற்றும் வயம்ப ரூபா 29,343  ஆகவும் சப்ரகமுவ மாகாணத்தில் வாழும் நபர் ஒருவரின் சராசரி வருமானம் ரூபா 27,775 ஆகவும் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தளவில் இந்த வருமானம் மிகவும் மோசமாகக் காணப்படுகிறது.

‘தமிழ் மக்களுக்கு ஏன் கூட்டாட்சி நிர்வாகம் தேவை? தெற்கில் வாழும் சிங்கள மக்களுக்கு அது ஏன் தேவையில்லை என்பதை நாங்கள் கேட்க வேண்டும். கடந்த 70 ஆண்டுகளாக தெற்கின் அதிகாரத்துவமானது மத்தியில் குவிந்துள்ளதால் இங்கும் கூட்டாட்சி நிர்வாகம் அமுல்படுத்தப்பட வேண்டும்.

மத்தியில் ஆட்சி குவிந்திருந்தமையால் கிராமிய சிங்கள சமூகத்தை அபிவிருத்தி செய்வதில் தோல்வி ஏற்பட்டுள்ளது’ என சுகாதார அமைச்சர் கலாநிதிர ராஜித சேனரட்ன  செல்வநாயகம் நினைவு நாளில் (28 ஏப்ரல் 2017) கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.

1872 அரசியலமைப்பின் 09வது பரிந்துரையில் ‘ஒன்றுபட்ட’ சிங்கள பௌத்த தேசம் எனக் குறிப்பிடப்பட்ட போதிலும் இது கிராமத்தில் வாழும் ஏழை சிங்கள மக்களின் வாழ்வாதாரத்தை எவ்விதத்திலும் உயர்த்தவில்லை. தம்மைத் தாமே சிங்கள பௌத்த தேசப்பற்றாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் அனைவரும் சிங்கள பௌத்த மக்களின் பெரும்பாலானவர்களை வறுமையிலேயே தள்ளியுள்ளனர்.

சிங்கள பௌத்த ஒன்றுபட்ட தேசத்தின் சிங்கள ‘தேசப்பற்றாளர்கள்’ கடந்த 2010 தொடக்கம் 2015 வரையான ஆறு ஆண்டுகளில் 117,274 இளம் தாய்மார்கள் மற்றும் பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணிப்பெண்களாக அனுப்பியுள்ளனர். அந்த நாடுகளில் பெண்கள் பல்வேறு உடல் மற்றும் உள ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகுகின்ற போதிலும் தமது பொருளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பதற்காக இந்தப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வதை இந்தத் தேசப்பற்றாளர்கள் தடுக்கவில்லை.

தெற்கிலுள்ள சிங்கள மக்கள் தாம் ஏன் தமது மாவட்டத்தை விட்டு தொழில் தேடி வேறிடம் செல்ல வேண்டும் என தம்மைத் தாமே கேட்பதில்லை. இவ்வாறான பணிப்பெண் வேலைகள் நிகழ்காலத்தில் வாழ்க்கையைக் கொண்டு செல்ல உதவுமேயன்றி பாதுகாப்பான எதிர்காலத்திற்கு இது உகந்த பணியன்று.

சுரண்டல் உற்பத்தித் தொழிற்சாலைகள் மட்டும் ஏன் கிராமங்களை நோக்கி வருகின்றன எனவும் நவீன தனியார் வைத்தியசாலைகள், உயர் வர்த்தக நிலையங்கள் போன்ற நவீன வசதிகள் ஏன் கிராமங்களில் அமைக்கப்படவில்லை என ஏன் இந்த மக்கள் கேட்கவில்லை. இங்கு முதலீடுகளை மேற்கொண்டால் அதற்கான காசுப் பாய்வு கிடைக்காது என்பதும் இங்கு தொழிற்சாலைகளை அமைப்பதால் மலிவான விலையில் கூலித் தொழிலாளர்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதும் இதற்கான காரணமாகும்.

இந்த மாகாணங்களில் நிலவும் வறுமை நிலைக்கு ஒன்றுபட்ட சிங்கள பௌத்த தேசம் வேண்டும் எனக் கோரும் எவரும் பொறுப்பெடுக்க மாட்டார்கள். இவர்கள் கிராமங்களில் நிலவும் வறுமை நிலை தொடர்பாகக் கருத்துரைக்கக் கூட விரும்பமாட்டார்கள்.

இதனால் வடக்கு கிழக்கு மற்றும் வறுமை நிலையில் வாழும் கிராமிய சிங்கள மக்கள் வாழும் மாகாணங்களுக்கும் அவர்கள் தமது தீர்மானங்களைத் தாமாகவே இயற்றக்கூடிய உரிமையை வழங்கினால் அவர்கள் தாம் சந்திக்கும் வறுமை நிலையையும் ஒழிக்க முடியும்.

இந்த மக்களுக்கு கூட்டாட்சி நிர்வாக உரிமையை வழங்கினால் சிறிலங்கா சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாக இந்த மக்கள் சந்திக்கும் வறுமை நிலையை அவர்கள் தாமாகவே ஒழிப்பார்கள்.

ஆங்கிலத்தில்  – Kusal perera மொழியாக்கம் – நித்தியபாரதி

No comments

Powered by Blogger.