யாழ்ப்பாணத்தில் 'தாரா' என்ற பெயரில் அடாவடி குழு
யாழ்., வலிகாமம் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட ஆவா குழுவைத் தொடர்ந்து, வடமராட்சிப் பகுதியில் தாரா குழு பிரபல்யமடையத் தொடங்கியுள்ளது.
வடமராட்சிப் பகுதியில் நடந்தேறிய பல பாரிய கொள்ளைகள் மற்றும் தங்கச் சங்கிலி அறுப்பு போன்ற குற்றச்செயல்களுடன், இந்தக் குழுவுக்கு தொடர்பிருப்பதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதற்கமைய, பருத்தித்துறை - கொட்டடி மற்றும் வளலாய் - அன்டனிபுரம் ஆகிய பகுதிகளை மையமாக வைத்து, இந்தக் கும்பல் செயற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதிலும், வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நெல்லியடி பொலிஸ் பிரிவுகளில் நடைபெற்ற பல கொள்ளைகள் மற்றும் சங்கிலி அறுப்புகளுடன், இவ்வணிக்கு நேரடி தொடர்புகளிருப்பதாகவும் விசாரணைகளில் இருந்து மேலும் தெரியவந்துள்ளது.
உடுப்பிட்டிப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவமொன்றையடுத்தே, இக்குழுவை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இதையடுத்து, இக்குழுவைச் சேர்ந்த நபரொருவர் கைதாகியுள்ளார்.
இக்கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள மூவர் கொண்ட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே, தாரா குழு எனும் கொள்ளை கும்பல் அகப்பட்டுள்ளது.
இக்கும்பலின் முக்கிய சந்தேகநபரொருவர் கைதாகி, பருத்தித்துறை நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இக்கும்பலின் ஏனையவர்களும் கைதாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே பருத்தித்துறை பகுதியில் முன்னதாக நடைபெற்ற சில கொள்ளைகளின் போது அரங்கேற்றப்பட்ட கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படாதுள்ள நிலையில், இக்குழு மீது சந்தேகம் திரும்பியுள்ளது. அவை தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக, பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment