விமர்சனத்தை சிரித்தபடி, ரசித்த மஹிந்த - இடையூறுகளையும் கைகளை காட்டி நிறுத்தினார்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தனது வரவு செலவுத் திட்ட உரையில் கடுமையாக விமர்சித்த போது அதனை சிரித்தவாறே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டிருந்ததுடன், சம்பந்தனின் உணர்வை தான் புரிந்து கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான 6 ஆம் நாள் விவாதம் இடம்பெற்றது. இதில் சுமார் 50 நிமிடங்கள் வரை உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தனது உரையின் பெரும் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை விமர்சித்திருந்தார்.
இவ்வாறு சம்பந்தன் விமர்சித்துக் கொண்டிருந்த போது சபைக்குள் சிரித்தவாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வந்தமர்ந்தார். மகிந்த ராஜபக்ஷ வந்தமர்ந்ததை அவதானித்த சம்பந்தன் அவரின் பக்கமாகத் திரும்பி நின்று அவரைப் பார்த்தவாறு சுமார் 10 நிமிடங்கள் உரையாற்றினார்.
இதில் மகிந்த ராஜபக்ஷவின் தந்தையின் உயர் பண்புகள், மகிந்த ராஜபக்ஷவுடன் தனக்குள்ள நெருங்கிய தொடர்பு, மகிந்தவுக்குள்ள மக்கள் செல்வாக்குப் போன்ற விடயங்களை குறிப்பிட்ட சம்பந்தன் மகிந்த மக்களால் வெறுக்கப்பட்டதையும் அதற்கு ஆதாரமாக அவர் தேர்தல்களில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையையும் சுட்டிக்காட்டினார்.
இதனை மகிந்த ராஜபக்ஷ சிரித்தவாறே கேட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு ஒரு ஆசனம் தள்ளி முன்னாள் சபாநாயகரும் எம்.பி.யுமான சமல் ராஜபக்ஷவும் அமர்ந்திருந்து கேட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் மகிந்த ஆதரவு பொது எதிரணி எம்.பி.க்களான லொகான் ரத்வத்தை உள்ளிட்ட சிலர் சம்பந்தனின் உரைக்கு இடையூறு ஏற்படுத்த முற்பட்ட போது அவர்களை அமைதியாக இருக்குமாறு கைகளால் சைகை காட்டி மகிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தினார்.
சம்பந்தன் மகிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாகவே புதிய அரசியலமைப்புக்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்தார். அத்துடன், தானோ, தமிழர்களோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிரானவர்களல்ல என்பதை மகிந்தவுக்கு சுட்டிக்காட்டிய அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த ஹெக்டர் கொப்பேகடுவவை தேர்தலில் யாழ். மாவட்ட மக்கள் வெற்றியீட்ட வைத்ததையும் நினைவு கூர்ந்தார்.
சம்பந்தனின் உரையை அடுத்து உரையாற்ற எழுந்த மகிந்த ராஜபக்ஷ சம்பந்தனின் குற்றச்சாட்டுகள் , கேள்விகள், கோரிக்கைகள் எதற்கும் பதிலளிக்காது சம்பந்தனின் உணர்வு பூர்வமான உரையை நான் புரிந்து கொள்கிறேன் என்று மட்டும் கூறிவிட்டு வரவு செலவுத் திட்டம் தொடர்பில் தன் உரையைத் தொடர்ந்தார்.
Post a Comment