"ஜெனீவாவில் இலங்கை முஸ்லிம்ககள், பற்றி எதுவுமில்லை" - பச்சையாக பொய் சொன்ன இலங்கை
ஜெனீவாவில் சர்வதேச நாடுகளின் மனித உரிமை விவகாரம் தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் அங்கு இலங்கை முஸ்லிம்களின் உரிமைகள் சார்ந்த விவகாரங்கள் பேசப்படவில்லை எனவும் எந்தவொரு நாடும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்பில் கேள்வியெழுப்பவில்லை என்றும் தெரியவருகிறது.
சர்வதேச நாடுகளின் மனித உரிமை விவகாரம் தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடரில் நேற்று முன்தினம் மாலை 2.30 மணி முதல் 6 மணி வரை இலங்கை தொடர்பான நிலைவரம் ஆராயப்பட்டது.
இதன்போது இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைப் பிரதிநிதிகளிடம் கேள்விகளை எழுப்பியதுடன் பரிந்துரைகளையும் முன்வைத்தனர். இருப்பினும் எந்தவொரு நாடும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவாத செயற்பாடுகள் தொடர்பிலோ வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பிலோ கேள்விகளை எழுப்பவோ பரிந்துரைகளை முன்வைக்கவோ இல்லை என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் 'விடிவெள்ளி'க்குத் தெரிவித்தார்.
மேற்படி கூட்டத் தொடரில் சுயாதீன அவதானிப்பாளராகக் கலந்து கொள்ளும் நோக்கில் ஜெனீவாவுக்கு சென்றுள்ள அப்துர் ரஹ்மான், அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தகவல் தருகையில், இக் கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பில் பல நாடுகள் கேள்விகளையெழுப்பின. துரதிஷ்டவசமாக எந்தவொரு நாடும் இலங்கை முஸ்லிம்களின் நிலைமைகள் குறித்து பேசவில்லை. சவூதி அரேபிய நாட்டின் பிரதிநிதி கூட இலங்கையில் வறுமை ஒழிப்புக்கு என்ன செய்கிறீர்கள்? என்றே கேள்வியெழுப்பினார். இது இலங்கை முஸ்லிம்களின் விவகாரங்கள் தொடர்பில் நாம் எந்தளவு தூரம் சர்வதேச நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம் என்ற கேள்வியை எழுப்புவதாகவுள்ளது.
இனவாத செயற்பாடுகள் குறித்து கேள்விகள்
இந்த கூட்டத் தொடரில் இலங்கையில் இடம்பெறும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் பல நாடுகள் கேள்வியெழுப்பின. குறித்த கேள்விகளுக்கு இலங்கை சார்பில் பதிலளித்த வெளிவிவகார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா உண்மைக்குப் புறம்பான விடயங்களையே பதிலாக முன்வைத்தார்.
இலங்கையில் வெறுப்புப் பேச்சை தடுப்பதற்கு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, தாம் ஐ.சி.சி.பி.ஆர். ( சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச இணக்கப்பாட்டு உடன்படிக்கை) இன் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இனவாத மதவாத செயற்பாடுகளுக்கு எந்தவித அனுமதியையும் அரசாங்கம் வழங்கவில்லை என்றும் ஹர்ஷ டி சில்வா பதிலளித்தார். பொலிஸ் மா அதிபர் இதுவிடயத்தில் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்வதாகவும் இனவாத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதில் இலங்கைப் பொலிசார் விரைந்து செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் இது முழுக்க முழுக்க சர்வதேச நாடுகளை தவறாக வழிநடாத்தும் பொய்யான பதிலாகும்.
மேற்படி ஐ.சி.சி.பி.ஆர். உடன்படிக்கையை அரசாங்கம் இலங்கையில் சரியாக நடைமுறைப்படுத்தியிருந்தால் இனவாதம் பேசிய சகல பௌத்த பிக்குகளையும் ஏனைய இனவாதிகளையும் இதன் கீழ் கைது செய்திருக்க வேண்டும். ஆனால் தந்துரையில் முகநூலில் புத்தரை அவமதித்து பதிவிட்டதாகக் கூறப்படும் முஸ்லிம் இளைஞரை மாத்திரமே மேற்படி சட்டத்தின் கீழ் கைது செய்து விளக்கமறியலில் வைத்தனர். அந்த வகையில் அரசாங்கம் பாரபட்சமான முறையிலேயே இச் சட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்தியுள்ளது.
குறிப்பாக இலங்கையில் இதுவரை இடம்பெற்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட பொலிஸ் முறைப்பாடுகளுக்கமைய மேற்படி சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் அதனை பொலிசார் செய்யவில்லை. இவ்வாறான நிலையில் அரசாங்க பிரதிநிதி ஜெனீவாவில் அளித்த பதில் கவலைக்கிடமானதாகும்.
தெளிவுபடுத்த நடவடிக்கை
இந் நிலையில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் உண்மையான பிரச்சினைகள் தொடர்பில் நான் ஜெனீவாவை தளமாகக் கொண்டியங்கும் பல்வேறு சர்வதேச சமூகப் பிரதிநிதிகளுடனும் இராஜ தந்திரிகளுடனும் அதே போன்று சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் விசேட சந்திப்புக்களை இன்றும் நாளையும் நடத்தவுள்ளேன்.
இதன்போது இலங்கையில் தொடரும் இனமதவாத அச்சுறுத்தல்கள், வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தலுள்ள சவால்கள், வடக்கு கிழக்கு தமிழ்-முஸ்லிம் மக்கள் எதிர் கொள்ளும் காணிப் பிரச்சினைகள், அரச படைகள் மற்றும் திணைக்களங்களினால் கையகப்படுத்தப்படும் காணிகள், புதிய தேர்தல் திருத்த சட்டம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள், அளுத்கம போன்ற கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள் , சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் காட்டப்பட்டு வரும் பாரபட்சமான அணுகு முறை மற்றும் இனங்களுக்கிடையலான நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் உள்ள சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் எடுத்துரைக்கவுள்ளதுடன் அறிக்கைகள் , ஆவணங்களையும் சமர்ப்பிக்கவுள்ளேன் என்றார்.
இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு உணர்த்தல்: உங்களை முஸ்லிமல்லாத ஏனையவர்கள் உங்களுக்கு அனியாயம் செய்து உங்களை துன்புருத்தி கொலைசெய்தாலும் அரபு நாட்டு தலைவர்கள் அதன் அரசாங்கம் உங்களுக்கு உதவிகரம் நீட்டுவார்கள் என்று ஒருபோதும் ஆகாயக்கோட்டை கட்டவேண்டாம் அங்குள்ள சிலமக்களிடம் இஸ்லாமிய பண்பாட்டு உணர்வுகள் இருக்கின்றன ஆனால் தலைவர்களும் அரசாங்கமும் இதிலிருந்து வெகு தூரமானவர்கள் என்பதை புரிந்து நம்மலுடன் வாழும் வேற்றுமத மக்களுக்கு நல்லது செய்து அவர்களுக்கு நம் இஸ்லாமிய பண்புகளை அறியவைத்து உணர்வூட்டி சினேகிதனாக வாழ முயற்சிப்போம் அவர்கள் திட்டமிடாமல் தவருதலாக நமக்கு பிழை செய்துவிட்டால் அவர்களை மன்னித்து வாழ்வோம்.
ReplyDeleteMay almighty Allah acknowledge your meritorious deed! Aameen.
ReplyDelete