வெலிக்கடை சிறைச்சாலை மோதல், சிலரைக் கொலை செய்யும்நோக்கில் திட்டமிடப்பட்டது
வெலிக்கடை சிறைச்சாலை மோதல் திட்டமிடப்பட்டவொன்று என தற்போதைய அரசாங்கத்தால் அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவே வெலிக்கடை சிறைச்சாலைக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை அனுப்புவதற்கு ஆலோசனை வழங்கியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலைகள் அத்தியட்சகரின் அனுமதியின்றி பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பிரவேசித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமது உத்தியோகத்தர்களுக்கு மோதலைக் கட்டுப்படுத்துவதற்கான இயலுமையுள்ளதாக சிறைச்சாலைகள் அத்தியட்சகர் அறிவித்திருந்த போதிலும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பிரவேசித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 27 கைதிகள் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்திருந்தனர்.
பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரும் சில பொலிஸாரும் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்த போதிலும், அதன் முடிவுகள் இன்னும் வௌியிடப்படவில்லை.
இந்நிலையில், அப்போதைய புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு மூவரடங்கிய குழுவொன்றை நியமித்தார்.
இந்த குழுவின் இடைக்கால அறிக்கை 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமும், இறுதி அறிக்கை 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதமும் அப்போதைய அமைச்சர் சந்திரசிறி கஜதீரவிடம் கையளிக்கப்பட்ட போதிலும், அதற்கு என்ன நேர்ந்தது என்று இன்று வரை தெரியவில்லை.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், அப்போதைய நீதி அமைச்சரான விஜயதாச ராஜபக்ஸவினால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி மற்றுமொரு குழு நியமிக்கப்பட்டது.
600 க்கும் அதிக பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை 2015 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டது.
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற இந்த மோதல் சிலரைக் கொலை செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டவொன்று என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலை மோதல் தொடர்பில் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் தேசிய கணக்காய்வு சட்டம் தாமதமாகுமா?
Post a Comment