வவுனியாவில் குறிவைக்கப்படும் முஸ்லிம்களின் வர்த்தகம்
-ARA.Fareel-
"கடந்த மாதம் 31 ஆம் திகதி எங்களது கடைகளுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள். ‘இது தான் ஆரம்பம். நாங்கள் கடைகளை எடுத்தே தீருவோம்’ என்று கூறிச் சென்றார்கள். இருபது நாட்கள் கழித்து கடைகள் தீயில் சாம்பராகி விட்டன" என்கிறார் வவுனியாவில் தீ அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கடையொன்றின் உரிமையாளர்.
கடந்த காலங்களில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் மற்றும் சில குழுக்களால் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் எரியூட்டப்பட்டன. முஸ்லிம்களின் வர்த்தகத்தைச் சிதைக்கவேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.
ஆனால் இன்று தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் வவுனியா நகரில் முஸ்லிம்களின் கடைகள் தீக்கிரையாகியுள்ளன. இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்பு முஸ்லிம்களின் கடைகளுக்கு எதிராக அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் விடுத்த சவால்கள் அனர்த்தத்திற்கு காரணம் என அவர்கள் மீது விரல் நீட்ட வைத்துள்ளது.
வவுனியா பஸார் ஜும்ஆ பள்ளிவாசலுக்குச் சொந்தமான கடைகள் 38 இயங்கி வருகின்றன. இவற்றில் 14 கடைகள் பெட்டிக் கடைகளாகும். இந்த 14 கடைகளில் மூன்று கடைகளே தீ அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இரு கடைகள் முழுமையாக தீயினால் அழிவுக்குள்ளாகியுள்ளன. ஒரு கடை பாதியளவு எரியுண்டுள்ளது.
முழுமையாக எரியுண்ட பேக் விற்பனை செய்யும் கடைக்கு 25 இலட்சம் ரூபா நஷ்டமேற்பட்டுள்ளது. மேலும் முழுமையாக சேதமடைந்த பென்சி சாமான்கள் விற்பனை செய்யும் கடைக்கு 5 இலட்சம் ரூபாவும் பாதியளவில் சேதமடைந்துள்ள கடைக்கு 1 ½ இலட்சம் ரூபாவும் நஷ்ட மேற்பட்டுள்ளது. மூன்று கடைகளுக்கும் மொத்தம் 31 ½ இலட்சம் ரூபா நஷ்டமேற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
முஸ்லிம் கடைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்
வவுனியாவில் பள்ளிவாசலுக்குச் சொந்தமான முஸ்லிம் கடைகள் சட்டவிரோதமானதெனவும் அக்கடைகள் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டுமெனவும் கோரி தமிழ் இளைஞர்கள் குழுவொன்றினால் கடந்த அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 15 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் வவுனியா நகரை ஊர்வலமாக வலம் வந்து வவுனியா பஸார் பள்ளிவாசல் முன்னால் நின்று பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
குறிப்பிட்ட கடைகள் சட்டவிரோதமானதெனவும் அவை அகற்றப்பட வேண்டுமெனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் அமைந்திருந்தது.
குறிப்பிட்ட கடைகளை அமைப்பதற்கு வவுனியா நகர சபை ஒரு கடைக்கு 5 அடி வீதம் சட்ட ரீதியாக ஒதுக்கியுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். என்றாலும் வவுனியா நகர் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கடைகள் யுத்தம் நிலவிய காலத்தில் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அப்பகுதியிலுள்ள பெரும்பான்மைத் தமிழர்கள் ஆதரவளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தீ அனர்த்தம்
வவுனியா பஸார் பள்ளிவாசலுக்குச் சொந்தமான இந்தக் கடைகளில் கடந்த 20 ஆம் திகதி அதிகாலை 1.15 மணியளவில் தீ அனர்த்தம் ஏற்பட்டிருக்கிறது. தீ பரவியதையடுத்து பள்ளிவாசலுக்கு அறிவிக்கப்படவே பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சம்பவம் அறிவிக்கப்பட்டது. உடனடியாக ஒன்று திரண்ட முஸ்லிம்கள் பள்ளிவாசலிலிருந்து வாளிகள் மூலம் நீரைக் கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சி செய்தபோதும் அது முடியாமற் போயுள்ளது. இரு கடைகள் தீயினால் முற்றாகக் கருகியுள்ளன. தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு தீ ஏனைய கடைகளுக்குப் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த தினம் அதிகாலை 1.15 மணியளவில் பஸ்ஸில் வவுனியாவுக்கு வந்து சேர்ந்த சரூக் என்பவர் சம்பவத்தை நேரில் கண்டுள்ளார். இது தொடர்பில் அவர் பொலிஸில் வாக்கு மூலமொன்றினையும் அளித்துள்ளார்.
நான் பஸ்ஸில் வந்து இறங்கி நடந்துவரும்போது காலை 1.15 மணியளவில் ஒருவர் வவுனியா பஸார் பக்கமும் மேலும் ஒருவர் ஹொரவப்பொத்தான வீதிப்பக்கமும் ஓடிக் கொண்டிருந்தார்கள். பள்ளிவாசலுக்கு முன்னாலிருந்த கடைகள் தீயினால் எரிந்துகொண்டிருந்தன. எனக்குப் பயம் வந்துவிட்டது. நான் பள்ளிவாசலுக்கு வெளியே இருந்து சப்தமிட்டேன். அதன் பிறகு பலர் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்கள் என்று பொலிஸாருக்கு அளித்துள்ள வாக்கு மூலத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
சி.சி.ரி.வி. கமரா பதிவுகள்
தீயினால் சேதங்களுக்குள்ளான கடைகளுக்கு முன்னால் உள்ள கடையொன்றின் சி.சி.ரி.வி. கமெரா பதிவுகளைப் பெற்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இக்கமரா பதிவுகள் சந்தேக நபர்களை இனங்காணக் கூடியதாக இருக்குமென பொலிஸார் தெரிவிக்கின்றனர். அப்பதிவில் மோட்டார் சைக்கிளில் இருவர் இருப்பது பதிவாகியுள்ளது. பதிவுகள் தெளிவாக இல்லாமையால் சி.சி.ரி..வி கமெரா பதிவுகள் மேலதிக ஆய்வுக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடை உரிமையாளர் பிரேம் நவாஸ்
தீயினால் பாதிக்கப்பட்ட 5 இலட்சம் ரூபா நஷ்டமேற்பட்ட பென்சி சாமான்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் என்.எம். பிரேம் நவாஸ் தீ அனர்த்தம் தொடர்பில் விபரிக்கையில்;
எனது கடை தீயினால் எரிவது தொடர்பில் அறிவிக்க எனக்கு தொலைபேசி அழைப்புகள் அதிகாலை 1.50 மணிக்கு எடுக்கப்பட்டுள்ளது. அப்போது நான் நித்திரையில் இருந்துள்ளேன். அதிகாலை 2.05 மணிக்கே விபரம் அறிந்தேன். பள்ளிவாசல் தலைவர் விபரத்தை அறிவித்தார். உடனே நான் ஸ்தலத்துக்குப் போனேன். எனது கடை முற்றாக எரிந்திருந்தது.
இந்த தீ அனர்த்தம் மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டது என சிலர் பொய்ப்பிரசாரம் செய்கிறார்கள். எனது கடைக்கு அப்பால் உள்ள 4 ஆம் கடையிலேயே மின்சார மீட்டர் இருக்கிறது. இந்தக் கடையிலிருந்தே எனக்கு மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் மின்சாரம் ஓப் செய்யப்பட்டிருந்தது. இந்த அனர்த்தம் நாசகார செயல். கடைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களே இதைச் செய்திருக்கிறார்கள். அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் ‘இதுதான் ஆரம்பம், இந்தக் கடைகளை நாங்கள் எடுத்தே தீருவோம்’ என்று சவால் விட்டுச் சென்றார்கள். அதனாலேயே இது நாசகார செயல் என சந்தேகமின்றிக் கூற முடியும்.
எனது கடை முற்றாக எரிந்து விட்டது. வாழ்வதற்கு எனக்கு வேறு வழியில்லை. 4 பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர்களில் 3 பேர் வயது வந்த பெண் பிள்ளைகள். எமக்கு நீதி கிடைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட தரப்பினரை வேண்டிக் கொள்கிறேன் என்றார்.
பள்ளிவாசல் உப தலைவர் யூசுப் நஸார்
வவுனியா பஸார் ஜும்ஆ பள்ளிவாசல் உப தலைவர் யூசுப் நஸார் சம்பவம் தொடர்பில் தற்போதைய நிலைமையை விளக்கினார். அவர் விபரிக்கையில்;
‘பள்ளிவாசலுக்கும் கடைகளுக்கும் தொடர்ந்து பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பள்ளிவாசலுக்கும் கடைகளுக்கும் சி.சி.ரி.வி. கமெராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த புதன்கிழமை வட பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரின் தலைமையில் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடலில் பிரதி பொலிஸ் மா அதிபர், வவுனியா வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், சிவில் பாதுகாப்பு பிரதிநிதிகள், மதகுருமார்கள், கிராம சேவையாளர்கள் பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை விரைவில் இனங்காண முடியுமெனத் தெரிவித்தார் என்று கூறினார்.
இதேவேளை, கடைகளின் எரியுண்ட மாதிரிகள் இரசாயனப் பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பகுப்பாய்வு அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்ட பின்பே தீ அனர்த்தத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆர்ப்பாட்டம் நடத்தியோர் மீது விசாரணை
வவுனியா நகரில் முஸ்லிம்களின் கடைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியோரில் இருவரை அழைத்து பொலிஸார் தீ அனர்த்தம் தொடர்பில் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் போது தங்களுக்கும் சம்பவத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வவுனியா நகரில் முஸ்லிம்களின் வர்த்தகத்தை அழிப்பதற்கு சில குழுக்கள் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றன என்பது தெளிவாகிறது. எனவே அப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென சமூகம் எதிர்பார்க்கிறது.
இந்த தமிழ் பயங்கரவாதிகள் அழிந்தும் திருந்தவில்லை. ராஜபக்ச இருக்கும்வரை பெட்டிப்பாம்பாய் பொத்திக்கொண்டு இருந்த காடையர்கள் இன்று இந்தளவு தீவிரவாதம் புரிய கையாலாகாத முஸ்லிம் தலைமைகளும் காரணம்
ReplyDelete