வசீம் படுகொலை - நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள்
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில் சந்தேகத்துக்கு இடமான பல தொலைபேசி இலக்கங்களை கண்டுபிடித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று -08- கொழும்பு மேலதிக நீதிவான் ஜெயராம் டொஸ்கிக்கு அறிவித்தது.
வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பிலான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதே விசேட மேலதிக அறிக்கை ஊடாக இதனை குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்தது.
அதன்படி கண்டுபிடிக்கப்பட்டுள்ள சந்தேகத்துக்கு இடமான தொலைபேசி இலக்கங்களுக்கு உரிய நபர்களின் அடையாளம் மற்றும் நடவடிக்கைகளை உறுதி செய்துகொள்வதற்காக நிறுவனங்கள் பலவற்றில் இருந்து தகவல்களைப் பெற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக நீதிவான் ஜெய ராம் டொஸ்கிக்கு அறிவித்தது.
அதன்படி வெளிப்படுத்தப்பட்டுள்ள சந்தேகத்துக்கு இடமான தொலைபேசி இலக்கங்களுக்கு உரிய சந்தேகத்துக்கு இடமான நபர்களின் அடையாளம் மற்றும் நடவடிக்கைகளை உறுதி செய்ய குடிவரவு குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் மோட்டார் வாகன பதிவுத் திணைக்களம் ஆகியவற்றிலிருந்து தகவல்களைப் பெற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்தது.
இதனிடையே நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள முன் னாள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர மன்றில் ஆஜராகாத நிலையில், அவருக்கு பிடியாணை பிறப்பிக்க பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்கவினால் மன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனினும் அவர் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெறுவதாகவும், விசேட வழக்காக இந்த வழக்கு பார்க்கப்படுவதால் வைத்தியர்கள் மருத்துவ சான்றிதழ் அளிக்க முன்வரவில்லை எனவும் ஆனந்த சமரசேகரவின் சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோ இதன்போது நீதிவானிடம் தெரிவித்தார்.
இந் நிலையில் நேற்று பிடியாணை பிறப்பிக்காத நீதிவான் அடுத்த தவணையில் ஆனந்த சமரசேகர மன்றில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் எனவும் நேற்று மன்றில் ஆஜராகாததற்கான காரணத்தை அவர் மருத்துவ அறிக்கை ஊடாக மன்றுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதனைவிட நேற்று குற்றப் புலனாய் வுப் பிரிவு விசேட கடிதம் ஊடாக, இவ்வழக்கின் தடயப் பொருளாக உள்ள வஸீம் தாஜுதீனின் கையடக்கத் தொலைபேசியை விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நீதிமன்றிடம் கோரியது. புலனாய்வுப் பிரிவின் கோரிக்கைக்கு அமைவாக நீதிமன்றின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த கையடக்கத் தொலைபேசியானது விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கையளிக்கப்பட்ட நிலையில் வழக்கானது எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
Post a Comment