Header Ads



"ஓநாய் அழுகிறது" அழிக்கப் பிறந்தவர்களும், ஆளப் பிறந்தவர்களும்...!!


 – ரவூப் ஸய்ன் + மீள்பார்வை-

ஆடுகள் நனைகிறதென்று ஓநாய் அழுத கதைதான் இன்றைய நமது சமூக சூழலில் நிகழ்ந்து வருகிறது. கல்கிஸ்ஸையில் தங்கியிருந்த ரோஹிங்ய அகதிகளை பயங்கரவாதிகள் என்றும், மியன்மாரில் பௌத்தர்களைக் கொன்றொழிக்கின்றவர்கள் என்றும் கூறிக் கொண்டு அகதிகள் என்றும் பாராமல் அவர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்தவர்களில் சில பிக்குகளும் உள்ளடங்குவர்.

அச்சத்தில் உறைந்திருந்த அகதிகளை அவமானப்படுத்தி, தாக்குதல் நடத்திய கும்பலை ஞானசாரர் நியாயப்படுத்தவில்லை. அகதிகள் விவகாரத்தில் அப்படி நடந்திருக்கக் கூடாது என்று போட்டார் ஒரு குண்டை. எப்படி இந்தத் திடீர் மாற்றம். உண்மையில் இது மாற்றமல்ல. பிள்ளையைக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் கயமைத்தனம்.

கிந்தொட்டை வன்முறையின் போது கள விஜயம் செய்த ஞானசாரர், அங்கு நடந்த அமைதிக் கூட்டத்தில் பங்கு கொண்டிருந்தார். வழமையான அவரது ஆவேசக் குரல் அங்கு ஒலிக்காத போதும், “உங்கள் இளைஞர்களை கட்டுப்படுத்தாவிட்டால் எங்கள் இளைஞர்களையும் கட்டுப்படுத்த முடியாது” என்று கூறியிருந்தார்.

ஞானசாரரின் இந்த பெல்டி எல்லாம் எதற்காக என்பது ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் பட்டென்று புரிந்துவிடும். ஆனால் அசாத் சாலிக்கும் சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவுக்கும் ஏன் புரியவில்லை என்பதுதான் வியப்பாகவும் வேதனையாகவும் உள்ளது.

ஜம்இய்யதுல் உலமாவின் முப்திகளுக்குக் கூட இது புரியவில்லையா என்பது ஆச்சரியமான கேள்விதான். ஹலால் சான்றிதழை வாபஸ் பெற வைப்பதற்கு ஞானசாரர் கிளப்பிய புரளிகளும் பொய்க் குற்றச்சாட்டுகளும் இனவாதத்தின் மீது எண்ணெய் ஊற்றியதை அவ்வளவு சுலபமாக மறக்க முடியுமா என்ன?

அநகாரிகவின் வாரிசாக வந்துதித்து அளுத்கமையிலும் கிந்தொட்டையிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம் கடைகளையும் பள்ளிவாயல்களையும் அழித்து நாசப்படுத்திய ஒரு நாசகாரக் கும்பலுக்கு தலைமை வகிக்கும் பிக்குவுடன் ஜம்இய்யதுல் உலமா பேரம் பேசுவதன் பின்னணி என்ன?

அளுத்கம கலவரத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட மொத்த சொத்தழிப்பின் பெறுமானம் 450 கோடி என்று மதிப் பிடப்பட்டிருந்தது. பெஷன் பக், நோ லிமிட் உள்ளிட்டு நாட்டின் நாலா புறங்களிலும் இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் இழக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்து 1000 கோடி ரூபாவைத் தாண்டியிருக்கும் இது 1915 இல் கம்பளைக் கலவரம் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திய இழப்பை விட பன்மடங்கு அதிகம்.

நூற்றுக்கணக்கான பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டு முஸ்லிம்கள் செறிவாக வாழும் இடங்களில் புத்தர் சிலை திட்டமிட்டு வைக்கப்படும் காட்சிகளும் அமைதியாக நடந்த வண்ணமே உள்ளன. கடந்த ஐந்தாண்டுகளாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பகை உணர்வையும் இனக் குரோதத்தையும் ஊட்டி வளர்த்ததில் ஞானசாரர்தான் முன்னணிப் பங்கு வகித்தவர். இவர் மீதான குற்றச்சாட்டுக்களை வாபஸ் வாங்கவும் வழக்குகளை திருப்பிப் பெறவுமே ஜம்இய்யதுல் உலமா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக சமூக ஊடகங்களிலும் வலைத்தளங்களிலும் எக்கச்சக்கமான விமர்சனங்களும் விவாதங்களும் நடந்த வண்ணமுள்ளன.

பொறுப்பு வாய்ந்த ஜம்இய்யதுல் உலமாவோ இது குறித்து உத்தியோகபூர்வமான ஊடக சந்திப்பை நடத்துவதிலிருந்தும் சிவில் சமூகத்திற்குத் தெளிவுபடுத்துவதிலிருந்தும் ஒதுங்கியிருப்பது அதன் நம்பகத் தன்மையில் பெருத்த சந்தேகத்தை உண்டுபண்ணியுள்ளது.

ஞானசாரரின் மனநிலையில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்பதற்கு அவரது சமீபத்திய நகர்வுகளே ஆதாரமாக உள்ளது. சாரரும் அவரது நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்தவும் மியன்மாருக்கு சமீபத்தில் மேற்கொண்ட விஜயத்தின்போது அங்கு 8 இலட்சம் முஸ்லிம்களைத் துரத்தியடிப்பதற்கு பின்னணியில் இருந்து வரும் விராது தேரருடன் நடத்திய பேச்சுவார்த்தை ஊடகங்களில் கசிந்து நம்மைத் திடுக்கிட வைத்தது.

சாரரின் விஜயத்திற்கு முன்னர் ரோஹிங்ய முஸ்லிம்களின் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட மியன்மார் தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கொழும்பில் கூறிவிட்டே அவர் பறந்தார். ஆனால், விராதுடன் நடத்திய பேச்சுவார்த்தையோ முஸ்லிம்களுக்கு எதிரான கொலை வெறியிலிருந்து அவர் மீளவில்லை என்பதை உறுதி செய்தது.

இன்று ஞானசார தேரர் முஸ்லிம் எதிர்ப்பைக் கைவிட்டு விட்டார் என்றும் அவரது மனோநிலை மாறிவிட்டது என்றும் மியன்மார் முஸ்லிம்களுக்கு அவர் தான் குரல் கொடுக்கிறார் என்றும் அசாத் சாலி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கூறிக் கொண்டிருந்தபோதே விராதுவுடன் அவர் மற்றொரு சதித் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்.

ஞானசாரருடன் சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் சட்டத்தரணிகளும் ஜம்இய்யதுல் உலமாவும் இணைந்து சமரசம் பேசுவதன் பின்னணி என்ன? இது குறித்து முஸ்லிம்கள் விழிப்படைய வேண்டும். உச்சநீதிமன்றத்தில் சாரருக்கெதிரான சீரியஸான பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. இறைத்தூதரை அவமானப்படுத்தியமை, அல்குர்ஆனை அவமானப்படுத்தியமை, அல்லாஹ்வை அவமானப்படுத்தியமை உள்ளிட்டு, நீதிமன்றத்தை அவமானப்படுத்தியமை தொடர்பாகவும் குறித்த விசாரணைகள் முடிவடையும் தறுவாயில் உள்ளன. ஞானசாரரை குறைந்தது 3 ஆண்டுகள் சிறையில் தள்ளும் தீர்ப்பொன்றை நீதிமன்றம் வழங்கவுள்ளது என்ற எதிர்பார்ப்பு கூர்மையடைந்துள்ளது.

இந் நிலையில் ஞானசாரரின் தொடர்ச்சியான இருப்பும் இனவாத செயற்பாடுகளும் அரசாங்கத்திற்குப் பெரிய அச்சுறுத்தலாக அமையும் எனக் கரு திய ஜனாதிபதி தனிப்பிட்ட வகையில் அவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

வெளிநாடொன்றுக்குச் சென்று பௌத்த ஆலயமொன்றில் தங்கிப் பணியாற்றுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை சாரர் நிபந்தனைகளுடன் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி ஜப்பானிலுள்ள பௌத்த ஆலயமொன்றின் பிரதான மதகுருவாக ஞானசாரர்  சில ஆண்டுகளுக்குத் தங்கியிருக்கப் போகின்றார். ஆனால், அவர் மீதான நீதிமன்ற வழக்குகளை வாபஸ் பெற வேண் டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

வழக்குகளின் இறுதித் தீர்ப்பு வெளிவரவுள்ள நிலையில், நிறைவேற்று அதிகார முறையைப் பயன்படுத்தி ஜனாதிபதி அவரை மன்னிப்பதன் மூலம் சிறைத் தண்டனையிலிருந்து அவரை விடுவிக்கலாம். ஒரு வழக்கில் மாத்திரமே இது சாத்தியம். நிலுவையிலுள்ள சீரியஸான பல வழக்குகளிலிருந்து அவரை விடுவிப்பது ஜனாதிபதிக்கும் முடியாத காரியம்.

வழக்குத் தொடுத்தவர்கள் அவற்றை வாபஸ் வாங்கிவிட்டால் ஞானசாரர் சுத்தவாளியாகவே ஜப்பான் சென்று விடுவார். திரும்பி வரும்போது மீண்டும் தனது இனவாதப் புரளியை கிளப்பி விடுவார். எனவே, அவர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டால் முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரத்தைக் கைவிடுவ தாக ஜம்இய்யதுல் உலமாவுடன் சமர சம் பேசப்படுகின்றது.

ஐந்தாண்டு காலமாக முஸ்லிம் விரோத பிரச்சாரத்தைத் திட்டமிட்டு சிங்கள இளைஞர்கள் உள்ளத்தில் வளர்த்து வெறியூட்டியுள்ள ஞானசாரரை வழக்கிலிருந்து விடுவித்தால் இனவாதம் ஒழிந்து விடுமா? அதற்கென்ன உத்தரவாதம்? ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் இறுதியாக நம்பிக்கை வைக்கும் ஒரே இடம் நீதிமன்றங்களே. நீதிமன்றத்தின் பிடியிலிருந்து அல்லது சட்டத்தின் பிடியிலிருந்து ஞானசாரரை விடுவிப்பதற்கு ஜம்இய்யா சோரம் போவது மிகப் பெரிய அநியாயமாகும்.

சீரியஸான வழக்குகளில் கடுமையான தீர்ப்பையோ அடைக்கலம் வழங்கக் காத்திருக்கும் சிறைக் கம்பியோ சாரரை ஒன்றும் பயமுறுத்தவில்லை போலவே கிந்தோட்டையில் அவரது கொட்டம் உயர்கின்றது. உங்கள் இளைஞர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால் எங்கள் இளைஞர்களையும் கட்டுப்படுத்த முடியாது என்கிறார் ஞானசாரர்.

“குண்டர்கள் தாக்கியபோது பாதுகாப்புத் தரப்பினர் வேடிக்கை பார்த்தனர். படையினர் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை” என்று முஸ்லிம்கள் குற்றம் சாட்டும் ஒரு தருணத்தில் முப்படையினர் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றார் சாரர். அதன் மூலம் வேட்டைக் களத்தைத் தயார் செய்கிறார் அவர்.

அளுத்கமை வன்முறையில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு தருவோம் என்று பாராளுமன்றத்தில் பசப்பு வார்த்தை கூறிய அரசாங்கம், கிந்தோட்டை வன்முறைக்கு முன்னாலும் வாய் வீரமாக நான்கு வார்த்தைகளைப் பேசி அடங்கிப் போயுள்ளது.

இத்தகையதோர் கொதிப்பான சூழலில் தமது சொந்த அரசியல் நலன்களுக்காகவும் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காகவும் ஞானசாரருடன் பேரம் பேசுவது எவ்வளவு துரோகம். அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்குப் பணிந்தோ பணியாமலோ உலமா சபை இப்படியொரு முடிவுக்குச் சென்றமை மிகப் பெரிய சமூகத் துரோகமாகும் முஸ்லிம்கள் இது குறித்து விழிப்பாக இருக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.