Header Ads



புதிய அரசியலமைப்பை, அரசாங்கம் கைவிட வேண்டும் - மகிந்த ராஜபக்‌ஷ

புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் இது அல்லவெனவும் அதிகாரப்பகிர்வுக்கான யோசனையை அரசாங்கம் கைவிட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இன்று -02- பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மகிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

நாம் அன்றும் இவ்வாறான செயற்பாடொன்றை ஆரம்பிக்க முயற்சிகளை மேற்கொண்டோம். அவ்வாறான சகல சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டு வெளியிட்டு வந்துள்ளது.

எனினும். இந்த அரசியலமைப்பு தயாரிப்பு நடவடிக்கைகளானது உண்மையாக முன்வந்து மேற்கொள்ளப்படும் விடயமா என்ற சந்தேகம் இதை ஆரம்பிக்கும் போது எமக்கு இருந்தது.

இருப்பினும் கூட நாடு மற்றும் மக்கள் பற்றி சிந்தித்து இந்த செயற்பாடுகளில் நாம் கலந்துகொண்டோம். இந்த விவாதத்தின் போது அரச தரப்பில் ஐ.தே.க. உறுப்பினர் ஒருவர் உரையாற்றுகிறார். அதன் பின்னர் எதிர்க்கட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யொருவர் பேசுகிறார்.

மீண்டும் அரச தரப்பென்று சுதந்திரக் கட்சி எம்.பி.யொருவர் பேசுகிறார். அதையடுத்து எதிர்க்கட்சியென்று கூறி ஜே.வி.பி. எம்.பி.யொருவர் உரையாற்றுகிறார். இவர்கள் அனைவருமே நல்லாட்சியை ஏற்படுத்த சூழ்ச்சி செய்தவர்கள். இவர்கள் அனைவரும் நல்லாட்சி சூழ்ச்சியில் இருந்தவர்கள்.

அதேபோல், இவர்கள் அனைவரும் அரசியலமைப்பு சூழ்ச்சியில் இருப்பவர்கள். உண்மையான எதிர்க்கட்சியான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு சொற்ப நேரமே ஒதுக்கப்படுகிறது.

புதிய அரசியலமைப்பின் மூலம் நாட்டை பிளவுப்படுத்த நாம் எதிர்ப்பார்க்கவில்லை. நாட்டையும் இனங்களையும் ஐக்கியப்படுத்தும் அரசியலமைப்பொன்றே எமக்குத் தேவை. மத ரீதியாக அனைவரும் பேதங்களின்றி வாழும் சூழலொன்றையே நாம் இதன்மூலம் எதிர்பார்க்கிறோம்.

இதேநேரம், இந்த அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு மக்கள் ஆணையொன்று கோரப்பட்டிருக்கவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ரத்துசெய்வோம் என்று கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கூறப்பட்டதே தவிர அரசியலமைப்பை மாற்றுவதாக கூறப்பட்டிருக்கவில்லை. என அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. மிஸ்டர் மஹிந்த,

    நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும். அரசியலமைப்பைக் கைவிட வேண்டுமென்பது, இலங்கை மக்களின் ஏகோபித்த கருத்து.

    ReplyDelete

Powered by Blogger.