கோட்டாவின் ஏற்பாட்டில் மைத்திரி - மஹிந்த இரகசிய சந்திப்பு, பசில் அதிருப்தி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேரடிச் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து நேற்று தகவல் கிடைத்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும் பிரபல வர்த்தகருமான டட்லி சிறிசேனவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு மிக இரகசியமாக நடைபெற்றுள்ளது எனவும் அவ்வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் மஹிந்த ராஜபக்ஷவின் தம்பியாருமான கோட்டாபய ராஜபக்ஷவே சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார் என மேலும் தெரியவருகின்றது.
தற்போதைய குழப்பமான அரசியல் நிலைமை மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்துள்ள இழுபறி நிலைமைகள் தொடர்பில் இரு தலைவர்களும் நேரடியாகச் சந்தித்து பேசினால் சுமுக முடிவுகளை எடுக்கலாம் எனக் கருதப்பட்டு இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டபோதும் ஆக்கபூர்வமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என அறியமுடிந்தது.
இந்த சந்திப்பு குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கள் எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. விவரங்கள் வெளியாகும் பட்சத்தில் இரு தரப்பினரின் அரசியல் ஆதரவு அணிகள் அதிருப்திக்கு ஆளாகலாமெனக் கருதியே இந்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லையென நம்பப்படுகின்றது.
பஸில் அதிருப்தி
இந்த இரகசிய சந்திப்பு தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு தம்பியார் பஸில் ராஜபக்ஷ கடும் அதிருப்தியில் இருக்கின்றார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த அணியான பொது எதிரணியைப் பலப்படுத்த தாம் தீவிர முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் அரசியல் நிலைமைகள் அறியாமல் கோட்டபாய இப்படியான சந்திப்புக்களை ஏற்பாடு செய்வது அரசியல் ரீதியில் மஹிந்தவுக்கு பின்னடைவைத் தருமென பஸில் கடும் அதிருப்தியை வெளியிட்டியிருப்பதாகவும் மேலும் அறியமுடிந்தது.
~சுடர் ஒளி-
என்னதான் நடக்குது நடக்கட்டுமே. இருட்டினில் நீதி மறையட்டுமே... ஊழயை ஒழிப்போம் என்பது அந்தக் காலம். தலைமையை தக்கவைப்பது இந்த காலம்..
ReplyDelete