சாய்ந்தமருது பிரதேச சபையை அமைக்கவிருந்தோம், வர்த்தமானி வெளியிடவும் தயாராக இருந்தோம்
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிக்கமைவாக சாய்ந்தமருது பிரதேச சபையை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் தயாராக இருந்தோம். எனினும் கல்முனை மாநர சபையை நான்கு உள்ளூராட்சி மன்றங்களாக பிரிக்குமாறு தற்போது அப்பிரதேச மக்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்திலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் அபிப்பிராயம் பெறாது அதனை நிறைவேற்ற முடியாது. ஆகவே தற்போதைக்கு கல்முனை மாநகர சபையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளாது எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநாகர சபைக்கே தேர்தல் நடத்தப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பான் வர்த்தமானி அறிவித்தலில் அமைச்சர் பைஸர் முஸ்தபா நேற்று கைச்சத்திட்டார். அதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சாய்ந்தமருதுக்கு புதிய பிரதேச சபை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் வாக்குறுதியளித்திருந்தனர். எனினும் கல்முனை மற்றும் சாய்ந்தமருது மக்கள் மத்தியில் அது தொடர்பில் பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன. எனவே கல்முனை மாநாக சபையை நான்கு உள்ளூராட்சி மன்றங்களாகப் பிரிக்குமாறு தற்போது கோரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் அதனை ஓரேயடியாகச் செய்ய முடியாது. அது தொடர்பில் அப்பிரதேச அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சாய்ந்தமருது பிரதேச சபைக்கான கோரிக்கையே முன்வைக்கப்பட்டிருந்து. ஆகவே அதற்கான பணிகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்ததுடன் அதனை வர்த்தமானியில் அறிவிப்பதற்கும் நாம் தயாராக இருந்தோம்.
மேலும் சாய்ந்தமருது பிரதேச சபையை அமைப்பதற்கான தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் அப்பிரதேசத்திலுள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் உள்ளடங்களாக அப்பிரதேச மக்களின் அபிப்பிராயங்களைப் பெற்றே குறித்த தீர்மானத்திற்கு வந்தோம். ஏனெனில் எமது அரசாங்கம் மக்களின் அபிப்பிராயத்திற்குப் புறம்பாக தீர்மானம் மேற்கொள்வதில்லை.
நுவரெலிய மற்றும் அம்பமுவ பிரதேச சபை விவகாரம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம் எனக்கிருந்தது. எனினும் நான் அதனை அமைச்சரவை அனுமதியுடனேயே மேற்கொண்டேன். ஆகவே கல்முனை மாநாகர சபையை நான்கு சபைகளாக பிரிக்குமாறு முன்வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கை அப்பிரதேசத்திலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்களின் அபிப்ராயம் பெறாது மேற்கொள்ளப்பட முடியாது.
அப்பிரதேசங்களில் எவ்வகையான எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபையில் எவ்வித மாற்றமும் செய்யாது கல்முனை மாநாகரசபைக்கான தேர்தலே நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment