கொழும்பில் வித்தியாசமான பண மோசடி - எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள்
சினிமா பாணியில் கொழும்பில் பண மோசடி இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திட்டமிட்ட வகையில் வாகனத்தில் மோதுண்டு, போலியான காரணங்களை கூறி வாகன உரிமையாளர்களிடம் பணம் கொள்ளையடிக்கும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
நுகேகொட, கொஹுவல, களுபோவில மற்றும் என்டஸன் வீதி ஆகிய பிரதேசங்களில் விசேடமாக இந்த மோசடி நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனத்திற்கு நெருக்கமாக பயணிக்கும் இந்த மோசடி குழுவினர் வாகன பக்க கண்ணாடிகள் தம் மீது மோதும் வகையில் பயணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் வாகனம் தம்மீது மோதிவிட்டதனை போன்று நடுவீதியில் விழுந்து பாரிய காயம் ஏற்பட்டுள்ளதாக நாடகமாடும் இந்த குழுவினர், இனி தம்மால் தொழில் உட்பட எதனையும் செய்ய முடியாதென கூறி வாகன உரிமையாளர்களுக்கு அச்சத்தை ஏற்பட்டுகின்றனர்.
இறுதியில் பொலிஸ் நிலையத்திற்கு செல்ல தேவையில்லை சேதத்திற்காக இழப்பீடு செலுத்துமாறு கூறி உரிமையாளர்களிடம் பணம் சம்பாதித்து கொள்ளும் மோசடி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
என்டஸன் வீதியின் கடவத்தை சந்தியில் கடந்த 5ஆம் திகதி இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது வைத்தியர் ஒருவரிடம் 6000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் முஸ்லிம் தம்பதி பயணித்த காரில், மோதுண்டதாக கூறி 3500 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இது குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment