6 நிபந்தனைகள் அடங்கிய, கடிதம் அனுப்பிவைப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமாக இருந்தால், கூட்டு அரசாங்கத்தில் இருந்து ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விலக வேண்டும் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவிற்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதற்கான 6 நிபந்தனைகள் அடங்கிய கடிதமொன்றை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் கடந்த ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி அனுப்பியிருந்த கடிதத்திற்கு பதில் வழங்கும் வகையில், இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பதில் கடிதத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 42 பேர் கைச்சாத்திட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், முறிகள் கொடுக்கல் வாங்கலின் போது மத்திய வங்கியில் கொள்ளையிட்டவர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
தேசிய வளங்களை மற்றவர்களுக்கு வழங்கும் செயற்பாட்டில் இருந்து நீங்குதல், அரசியலமைப்பு வகுப்பு செயற்பாட்டில் இருந்து நீங்குதல், குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தல் போன்ற கோரிக்கைகளும் அதில் உள்ளடங்குகின்றன.
இந்த விடயங்களை நிறைவேற்றாத பட்சத்தில், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் வாக்காளர்களிடம் கேட்டறிந்துகொள்ள வேண்டும் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் துமிந்த திசாநாயக்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment