5 சிறுவர்கள் தப்பியோடி, காட்டில் தஞ்சம் - பொறுப்பாளர் தாக்கி கைகளில் காயம்
கிளிநொச்சி, திருவையாறு பகுதியிலமைந்துள்ள சிறுவர் இல்லத்திலிருந்து ஐந்து சிறுவர்கள் தப்பியோடியுள்ளதையடுத்து இப் பிரதேசத்தில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு (15) இச் சிறுவர் இல்லத்திலிருந்து வெளியேறி அயலில் உள்ள காணிகளில் ஒளிந்திருந்த நிலையில் கிராமத்து இளைஞர்கள் சிறுவர்களை மீட்டு விசாரித்த போது இல்லத்தில் உள்ள தங்களுக்கு பொறுப்பானவர்கள் தாக்கியதனால் தாங்கள் சிறுவர் இல்லத்திலிருந்து ஓடி வந்து விட்டதாகவும், இரவு ஒன்று கூடலுக்கு தாமதமாகியும் செல்லாத காரணத்தினால் தங்களுக்கு கடுமையாக அடி விழுந்ததாகவும் சிறுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு ஒரு சிறுவன் தனது கையில் ஏற்பட்ட காயத்தை காட்டி அடித்ததால் ஏற்பட்ட காயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த சிறுவர் இல்ல ஊழியர்கள் தாங்கள் சிறுவர்களை தாக்கவில்லை என்றும் இரவு ஒன்றுகூடலுக்கு சிறுவர்கள் வராது மரங்களில் ஏறியிருந்ததாகவும், சிறுவர்களை ஒன்று சேர்ப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியின் போதே சிறுவர்கள் இல்லத்தை விட்டு ஓடியதாகவும் தெரிவித்த ஊழியர்கள் சிறுவனின் கையில் ஏற்பட்ட காயம், மரத்திலிருந்து இறங்கும் போது ஏற்பட்டது என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மாவட்ட சிறுவர் நன்நடத்தை அதிகாரிக்கு தகவல் அனுப்பப்பட்டு அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்ததோடு சிறுவர்களை மீண்டும் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.
மேலும் தான் நேற்று(16) இச் சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Post a Comment