வீதியில் கண்டெடுத்த 4 இலட்சத்தை, உரியவரிடம் ஒப்படைத்த சாரதி - குவிகிறது பாராட்டு
வீதியில் கண்டெடுத்த நான்கு இலட்சத்து 11 ஆயிரம் ரூபா பணத்தை முச்சக்கர வண்டி சாரதியான விஸ்வநாதன் பஞ்சசீலன் ( வயது 31) கண்டி பொலிஸாரின் ஊடாக உரியவரை கண்டுபிடித்து ஒப்படைத்த அவரின் நேர்மையான செயலை அனைவரும் பாராட்டுகின்றனர்.
கண்டி நகரில் முச்சக்கர வண்டி ஓட்டும் இளைஞரான விஸ்வநாதன் பஞ்சசீலன் தமது முச்சக்கர வண்டியை செலுத்திக் கொண்டு வந்து அதனை கண்டி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க மாவத்தை வீதியில் நிறுத்த முற்பட்டபோது அநாதரவாக கிடந்த பொதியொன்றை கண்டெடுத்துள்ளார்.
அதனை சந்தேகத்தில் அவர் பிரித்து பார்த்தபோது அதனுள் நான்கு இலட்சத்து 11 ஆயிரம் ரூபா பணம் இருப்பதை கண்டு அவர் அதனை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் கண்டி பொலிஸ் தலைமையகத்துக்குச் சென்று பொலிஸ் உயரதிகாரிகளிடம் பணத்தை கண்டெடுத்த விபரத்தை கூறி அதன் உரிமையாளரை கண்டுபிடித்து ஒப்படைக்க தான் விரும்புவதாக தெரிவித்து பணத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
பொலிஸார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு உரியவரை கண்டுபிடித்துள்ளனர். அவர் காலி ஹினிதும பிரதேசத்தை சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவராவார்.இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமது பிறந்த தினத்தை முன்னிட்டு ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளார். தனது வழிபாடு நிறைவடைந்ததும் கண்டி விக்கிரமசிங்க மாவத்தை வாகன தரிப்பிடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு முச்சக்கர சாரதி ஒருவரிடம் இரவு வேளை தங்குவதற்காக சிறந்த விடுதிகளை கேட்டுள்ளார்.
விபரங்களை அறிந்து கொண்ட வர்த்தகர் கண்டி வாவிக்கரை அருகில் உள்ள விடுதி ஒன்றுக்குச் சென்று அங்கு தனது காரை நிறுத்திவிட்டு தனது பணப்பையை தேடியுள்ளார்.ஆனால் அது இருக்கவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் பகல் வரும் வழியில் நிட்டம்புவயில் பகல் உணவுக்காக விடுதி ஒன்றிற்கு சென்றிருந்தார்.அங்குதான் பணப்பையை தவற விட்டிருக்கலாம் என கருதி அங்கு விரைந்து சென்று அங்கிருந்த சீ.சீ.டி.வி பதிவுகளை பார்த்தபோது வியாபாரி பணப்பையுடன் அங்கிருந்து வெளியேறுவது அதில் புலப்பட்டுள்ளது.
இதனால் அப்பணம் தமக்கு மீள கிடைக்கப்போவதில்லை என்று கருதி ஹினிதுமைக்கு திரும்பிவிட்டார். விஸ்வநாதன் பஞ்சசீலன் கண்டெடுத்த பணப்பை பொதியில் உரிமையாளரின் தேசிய அடையாள அட்டையும் இருந்துள்ளது.
இதனைக் கொண்டு பொலிஸார் உரியவரை தொடர்பு கொண்டு கண்டிக்கு வரவழைத்து விசாரணை செய்த பின்னர் பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி உரிய பணத்தை விஸ்வநாதன் பஞ்சசீலன் மூலம் அவரிடம் கையளிக்க செய்தனர்.
முச்சக்கர வண்டி சாரதியான விஸ்வநாதனின் சிறந்த நேர்மையான செய்கையை பொலிஸ் அதிகாரிகளும் குறிப்பிட்ட வர்த்தகரும் பாராட்டியதோடு உரிமையாளரான வர்த்தகர் அவரின் நேர்மைக்காக ஒரு இலட்சம் ரூபா பணத்தை பரிசாக கொடுத்த போதும் அவர் அதனை வாங்க மறுத்துவிட்டார். இவரது இச்செயலை கண்டி மாநகரில் பலதரப்பட்டவர்களும் பாராட்டுகின் றனர்.
Post a Comment