பெற்றோல் தட்டுப்பாடு நீங்க 24 மணிநேர சிறப்பு விநியோகத் திட்டம் - மோடியை முந்திய டுபாய் ‘லேடி’
டுபாயில் இருந்து “நெவஸ்கா லேடி” என்ற எண்ணெய் தாங்கி கப்பல் 40 ஆயிரம் மெட்றிக் தொன் பெற்றோலுடன், நேற்று மாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
சிறிலங்காவில் பெற்றோல் தட்டுப்பாடு மோசமடைந்திருக்கும் நிலையில், இந்தக் கப்பல் நேற்று மாலை சுமார் 8 மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, நேற்றுமாலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக எண்ணெய் கப்பல் ஒன்றில் 21 ஆயிரம் கிலோ லீற்றர் பெற்றோலை அனுப்புவதாக உறுதிஅளித்திருந்தார்.
எனினும், இந்தியாவில் இருந்து இந்தக் கப்பல் வந்து சேருவதற்கிடையில், நேற்று மாலை டுபாயில் இருந்து நெவஸ்கா லேடி எண்ணெய் தாங்கி பெற்றோலுடன் கொழும்பு வந்துள்ளது.
இந்தக் கப்பல் முத்துராஜவெல எண்ணெய் சுத்திகரிப்பு வளாக இறங்குதுறையை வந்தடைந்ததும், பெற்றோலின் தரம் சோதனை செய்யப்படும் என்று பெற்றோலிய வளங்கள் அமைச்சின் செயலர் உபாலி மாரசிங்க தெரிவித்தார்.
இன்று காலை எரிபொருள் தர அறிக்கை கிடைக்கும். இன்று காலை 11 மணியளவில், எரிபொருளை இறக்கும் பணிகள் தொடங்கும்.
இந்த பெற்றோலை விநியோகிக்கும் பணிகள் இன்று நண்பகல் ஆரம்பிக்கப்படும். ஏற்கனவே கையிருப்பில் உள்ள பெற்றோல் இன்று காலை நாடெங்கும் விநியோகிக்கப்படும்.
பெற்றோல் தட்டுப்பாடு நீங்கும் வரை 24 மணிநேர சிறப்பு விநியோகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பெற்றோல் விநியோகம் இன்று ஆரம்பிக்கப்பட்டாலும், தற்போதைய தட்டுப்பாடு நிலை இரண்டு நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment