Header Ads



139 பேரின் மரண தண்டனையை உறுதிப்படுத்தி, வங்காளதேச நீதிமன்றம் தீர்ப்பு

வங்காளதேசம் நாட்டில் கடந்த 2009-ம் ஆண்டில் ஆட்சிக்கு எதிராக நடந்த கலகம் தொடர்பாக 139 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் 146 பேரின் ஆயுள் தண்டனையை உறுதிப்படுத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வங்காளதேசம் நாட்டில் கடந்த 25-2-2009 அன்று அந்நாட்டின் ஆயுதப் படை வீர்ர்கள் பில்கானா பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் கலகத்தில் ஈடுபட்டனர். இருதரப்பு மோதலில் ராணுவ உயரதிகாரிகள் 57 பேர் உள்பட 74 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். அரசு நடத்திய சமரச பேச்சுவார்த்தையின் எதிரொலியாக கலகத்தில் ஈடுபட்ட வீர்ர்கள் ஆயுதங்களை துறந்து, சரணடைந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக கொலை, கொள்ளை, பொது சொத்தை சூறையாடுதல், அரசுக்கு எதிரான கலகம் விளைவித்தல் என பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் 58 தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

வழக்கை விசாரித்த டாக்கா கீழமை நீதிமன்றம் 152 பேருக்கு மரண தண்டனையும், 423 பேருக்கு ஆயுள் உள்ளிட்ட சிறை தண்டனையும் விதித்து கடந்த 2013-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. குற்றம்சாட்டப்பட்ட 277 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து டாக்கா நகரில் உள்ள உயர்நீதிமன்றத்தின் மூன்றுநபர் அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்து நேற்றும் இன்றும் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. 

கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி 139 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் 146 பேரின் ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்ற அமர்வு இன்று உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தது.

No comments

Powered by Blogger.