அகதிகளை மதிக்கத் தெரியாதோர், ஆண்டவனைத் துதித்தாலும் தப்ப முடியாது - சிறீநேசன் Mp
அகதிகளின் அவலம், அவஸ்தைகளை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் வேதனைகள் புரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீநேசன் தெரிவித்துள்ளார்.
ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும்,
அகதிகளின் அவலம், அவஸ்தைகளை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் வேதனைகள் புரியும். மக்களை அகதிகளாக்கிய அராஜகர்களுக்கு அது புரியாது.
பகுத்தறிவாளர்கள் அகதிகளின் பரிதாப நிலைமை பற்றி ஒத்துணரக்கூடியவர்கள். அப்படியானவர்கள் அகதிகளைக் கண்ணியமாக அனுகக்கூடியவர்களாவர்.
எமது தமிழ் மக்களுக்கும், ஏனைய அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கும் அகதிகளின் கண்ணீர், செந்நீர் பற்றி நன்கறிவார்கள்.
இவ்வாறிருக்க மியன்மாரில் கொடியவர்களின் கெடுபிடிகள், கொடுவினைகளுக்கு அஞ்சி உயிரைப் பணயம் வைத்து கடல் கடந்து சில நாடுகளுக்குத் தஞ்சம் அடைந்தவர்கள் தான் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள்.
அகதிகளாகக் கடலில் வரும் போது சில நூற்றுக்கணக்கான ரோஹிங்யர்கள் தமது உயிர்களைக் கூட ஆகுகளாக்கியுள்ளனர். அவற்றையும் கடந்து நமது நாட்டில் 30 ரோஹிங்யர்கள் அகதிகளாக அவலக் கண்ணீருடன் தஞ்சமடைந்துள்ளனர்.
இதில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் கூட அடங்குவர். அதிலொரு கர்ப்பிணித்தாய் இலங்கையில் வந்த பின்னர்தான் குழந்தையை பிரசவித்துள்ளார் என்றால் அகதிகள் யாவர் என்பதை பகுத்தறிவாளர்கள், பௌத்தறிவாளர்கள் புரிந்து கொள்ளமுடியும்.
ஆனால் மனிதமற்ற மமதையாளர்கள் மனிதத்தைப் புதைக்கக்கூடிய விதத்தில் ரோஹிங்யா அகதிகளை வீடொன்றில் இருந்து வெருட்டியடித்துள்ளதைப் பார்க்கக் கூடியதாக இருந்தது.
இந்த சம்பவமானது எமது நாட்டிற்கு அகௌரவத்தை ஏற்படுத்தக்கூடிய சம்பவமாகவே அமையும். மேலும் புத்தரின் போதனையை மீறிய அருவருக்கத்தக்க நிகழ்வாகவே இதனை நான் பார்க்கின்றேன்.
எந்த உண்மையான மதத்தலைவர்களும், மனிதாபிமானிகளும் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதும், வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவதும் வீரமோ, தீரமோ கிடையாது.
கோழைத்தனமான கொடிய செயலாகவே அமையும். எனவே, இப்படியான செயல்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன். நாட்டின் கௌரவத்தைக் குறைக்கும் எந்தச் செயலையும் உண்மையான நாட்டின் பிரசைகள் செய்ய மாட்டார்கள்.
நல்லாட்சியை மாசுபடுத்த எவருக்கும் அரசு அனுமதிக்கக்கூடாது. வன்முறையாளர்கள் யாராக இருந்தாலும் கூட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட்டு உரிய நடவடிக்கையை எடுத்தாக வேண்டும்.
சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற மியன்மார் நாட்டின் தலைவி ஆங்சாங்சூக்கி அம்மையார் ஆட்சி செய்யும் காலத்தில், ரோஹிங்கியர்கள் அகதிகளாக்கப்பட்டமை அவர் பெற்ற நோபல் பரிசைக் கேள்விக் குறியாக்கியுள்ளது என்பதும் நோக்கத்தக்கதாகும்.
அகதிகளை மதிக்கத் தெரியாதோர் ஆண்டவனைத் துதித்தாலும் தப்ப முடியாது என தெரிவிக்கபப்பட்டுள்ளது.
Post a Comment