தேர்தல்களில் செலவுகளை, கட்டுப்படுத்த திட்டம்
எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் மேற்கொள்ளும் செலவுகளைச் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் தற்போதைய தேர்தல் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யஅமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஏகமனதான அங்கீகாரத்தை வழங்கியிருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று (17) தெரிவித்தார். இதன்படி எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் அல்லது பொதுத்தேர்தல் ஆகியவற்றில் செலவுகள் கட்டுப்படுத்தப்படவுள்ளன. தேர்தலை நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்தும் பொருட்டு ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்திருப்பதாகவும் நேற்று அவரது அமைச்சில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தெரிவித்தார்.
தேர்தல்களின்போது வேட்பாளர்களும் அவர்கள் போட்டியிடும் கட்சியும் சுயேச்சைக் குழுக்களும் வரம்புக்கு மீறிய வகையில் பணத்தைச் செலவழிப்பதால், வாக்காளர்கள் ஒரு வித அழுத்தத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அயல் நாடான இந்தியாவில் தேர்தல் செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்கள் கலப்பு முறையில் நடைபெறவிருப்பதால், நியாயமாகவும் சுதந்திரமாகவும் வாக்காளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தேர்தலை நடத்த நடவடிக்ைக எடுக்க முடியும்.
எனவே, வசதி படைத்தவர்கள் கூடுதல் பணத்தை வாரியிறைக்கும்போது பண வசதி இல்லாதவர்கள் தேர்தல்களில் பின்னடைவைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது என்று ஜனாதிபதி தமது அமைச்சரவைப் பத்திரத்தில் சுட்டிக்காட்டியிருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, தேர்தல்களில் சுயேச்சைக் குழுக்களும் அரசியல் கட்சிகளும் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனினும், அவை விரும்பியவாறு பணத்தைச் செலவழிக்க முடிவதில்லை. அதனால், பணம் படைத்தவர்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்ெகாள்ளும் நோக்கத்தில். கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்கும் நிதி உதவி அளிக்கின்றனர். அதன் பின்னர் அவர்கள் தமது செல்வாக்கைச் செலுத்த முயற்சிக்கின்றனர். இது ஜனநாயகக் கட்டமைப்பிற்கு எதிரான செயற்பாட்டுக்கு வழிவகுக்கும். அதேநேரம், இஃது ஊழல்களை ஊக்குவிக்கவும் ஏதுவாக அமைந்து விடுகிறது. எனவே, தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியமாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில், தேர்தல் ஆணைக்குழுவுடன் இணைந்து சட்ட திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்ைக எடுக்கவுள்ளது. அவ்வாறு சட்டமாக்கப்பட்டதன் பின்னர், அதனை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்ைக எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Post a Comment