அரசியலமைப்பு விடயத்திலும், பிரிந்து நிற்கும் முஸ்லிம் சமூகம்
புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை அழுத்தம் திருத்தமாக முன்வைத்துள்ள நிலையில் அதற்கு முஸ்லிம் சமூகம் தனது ஆதரவை வழங்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறது. அதேபோன்று வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் முஸ்லிம்களுக்கு தனியலகு அல்லது கரையோர மாவட்டத்தைத் தர வேண்டும் எனும் கோரிக்கையை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ளது. வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையில் அரசியலமைப்பின் உள்ளடக்கம் மற்றும் அதில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை உள்ளடக்குவது தொடர்பில் ஆங்காங்கே கருத்தரங்குகளும் நடைபெற்று வருகிறன்றன. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடந்த வாரம் இது குறித்து இரு வேறு கருத்தரங்குகளை நடத்தியிருந்தன. கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள் சம்மேளனமும் இது தொடர்பான கருத்தரங்கு ஒன்றை நேற்று முன்தினம் நடத்தியிருந்தது. கொழும்பிலும் நாட்டின் வேறு பல பகுதிகளிலும் வெவ்வேறுபட்ட முஸ்லிம் அமைப்புகளால் புதிய அரசியலமைப்பு தொடர்பான கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் எதிர்வரும் நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் உலமாக்களடங்கிய குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை தயாரிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. மறுபுறம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அடங்கிய முஸ்லிம் புத்திஜீவிகளும் இது தொடர்பான முன்னெடுப்புகளில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் கட்சிகள், புத்திஜீவிகள், உலமாக்களின் இந்த ஆர்வம் மெச்சத்தக்கதாகும். இருப்பினும் இந்த முயற்சிகள் அனைத்துமே வெவ்வேறு துருவங்களாக தனித்தனி முகாம்களில் மேற்கொள்ளப்படுவதுதான் கவலைக்குரியதாகும்.
முஸ்லிம் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை இது விடயத்தில் வழக்கம்போன்று ஏட்டிக்குப் போட்டியான நகர்வுகளே முன்னெடுக்கப்படுகின்றன. ஒருவரையொருவர் குற்றம்சாட்டுவதிலும் ஒரு கட்சியின் யோசனையை மறு கட்சி மறுத்துரைப்பதிலுமே காலம் கடத்தப்படுகிறது. மாறாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் சார்பிலும் ஏற்றுக் கொள்ளத்தக்க யோசனைகளை முன்வைப்பதற்கு எவரும் தயாராகவிருப்பதாக தெரியவில்லை.
எனவேதான் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டிய முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை ஒட்டமொத்த முஸ்லிம் சமூகத்தினதும் கருத்தாக மாற்றி அதனை அனைத்து தரப்பினாலும் அங்கீகரிக்கப்பட்ட வலுவானதொரு ஆவணமாக மாற்றியமைக்க வேண்டியதே தற்போதுள்ள பணியாகும். மாறாக இந்த விடயத்திலும் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொண்டு தனித்தனி முகாம்களாக செயற்படுவதானது சமூகத்தின் எதிர்காலத்தையே கடுமையாகப் பாதிப்பதாக அமையும்.
அந்த வகையில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் இணைந்து செயற்படக் கூடிய மையப்புள்ளி ஒன்றை அடையாளம் கண்டு அதனை நோக்கி அனைவரையும் ஒருமுகப்படுத்த வேண்டும். இதனைச் செய்ய சிவில் சமூக சக்திகள் முன்வர வேண்டும்.
(இன்றைய -10- விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்)
ஹக்கீமை தவிர மற்ற அனைவரும் வடக்கு கிழக்கு இணைக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர் .
ReplyDeleteதமிழர் விடுதலை கூட்டணியின் முஸ்லீம் குரலாக காணப்படும் ஹக்கீம் மட்டுமே இந்த ஒற்றுமைக்கு பாதகமானவராக காணப்படுகின்றார் .
சேகு இஸ்தலின் ஹசன் அலி பசீர் சேவூதாவுத் நசீர்அகமட் போன்றொர் வடகிழக்கு இணைவிற்கு நிபந்தனையுடன் ஆதரவாகவே உள்ளனர்.
Delete