வடக்கிற்கு சமஷ்டி வழங்கப்பட்டுவிட்டதா..? பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி
நீதிமன்றத்தின் உத்தரவை அமுல்படுத்துவதில் வடக்கிற்கு ஒரு சட்டம், தெற்கிற்கு ஒரு சட்டமா? அப்படியானால் வடக்கிற்கு சமஷ்டி வழங்கப்பட்டுவிட்டதா எனக் கேட்டு மகிந்த ஆதரவுப் பொது எதிரணி சபையில் போர்க்கொடி தூக்கியது.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 23/ 2 இல், அம்பாந்தோட்டையில் இந்தியத் துணைத்தூதரகம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்மீது பொலிஸார் நடத்திய தாக்குதல், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, பிரசன்ன ரணவீர, சானக ஆகியோர் கைது செய்யப்பட்டமை, ஊடகவியலாளர் உட்பட பலர் தொடர்ந்தும் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கேள்விகளை எழுப்பி குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோதே இவ்வாறு மகிந்த ஆதரவு பொது எதிரணி போர்க்கொடி தூக்கியது. 23/2 இல் மகிந்த ஆதரவு பொது எதிரணித் தலைவரான தினேஷ் குணவர்தன எம்.பி. அம்பாந்தோட்டைத் தாக்குதல் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்புகையில்;
மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதனை எதிர்த்து அம்பாந்தோட்டையிலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்திற்கு முன்பாக மக்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் உள்ள உரிமை காரணமாக, பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
மக்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமுள்ள இந்த ஜனநாயக உரிமைக்கு எதிராக செயற்பட்ட பொலிஸார், கடுமையான தாக்குதலை மேற்கொண்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, பிரசன்ன ரணவீர, சானக ஆகியோரையும் முதியவர்கள், பெண்கள், சிறுவர்களையம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை.
எனவே, இவ்வாறான ஜனநாயக அடக்குமுறைகளை நிறுத்த பிரதமர் நடவடிக்கை எடுப்பாரா? கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையம் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா எனக் கேள்வியெழுப்பினார்.
இதன்போது சபையில் பிரதமரோ சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவோ இருக்கவில்லை. இந்நிலையில், அரச தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக எழுந்தபோது குறுக்கிட்ட தினேஷ் குணவர்தன எம்.பி. , இக்கேள்விகளுக்கான பதிலை நான் பிரதமரிடமிருந்தே எதிர்பார்க்கிறேன் என்றார். இதற்கு அமைச்சர் கயந்த பதிலளிக்கையில், எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் இதற்கான பதிலை பிரதமர் வழங்குவார் என்றார்.
இதன்போது எழுந்த மகிந்த ஆதரவு பொது எதிரணி எம்.பி.யான பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகராகிய நீங்கள்தான் பொறுப்பானவர். இங்கு 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்ற வரலாற்றில் இவ்வாறு ஒரு சம்பவம் இதுவரை நடைபெற்றதில்லை என்றார்.
இதனையடுத்து எழுந்த அதே அணியைச் சேர்ந்த வாசுதேவ நாணயக்கார எம்.பி., பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கைது செய்வதென்றால் முதலில் பொலிஸார் சபாநாயகருக்கு அறிவிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு சபாநாயகரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அம்பாந்தோட்டைக் கைதுகள் சபாநாயகருக்கு அறிவிக்கப்படாமலேயே இடம்பெற்றுள்ளன என்றார்.
இதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய பதிலளிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கைது செய்வதாக இருந்தால், எனக்கு அறிவிக்கப்பட வேண்டும். ஆனால் இக்கைது நீதிமன்ற உத்தரவை மீறியதால் இடம்பெற்றதென எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதனை எதிர்த்த மகிந்த ஆதரவு பொது எதிரணி எம்.பி.யான குமார வெல்கம, அப்படியானால் வடக்கிற்கு ஒரு சட்டம், தெற்கிற்கு ஒரு சட்டமா? நீதிமன்ற உத்தரவுகள் வடக்கிற்கு இல்லை; எமக்கு மட்டும்தானா? அம்பாந்தோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டம் போன்று யாழ்ப்பாணத்திலும் ஒரு ஆர்ப்பாட்டம் அரசுக்கு எதிராக நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் நீதிமன்றம் தடையுத்தரவு போட்டிருந்தது. ஆனால் அந்தத் தடையுத்தரவை உதாசீனம் செய்துவிட்டு, தமிழர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்ட இடத்துக்குச் சென்ற ஜனாதிபதி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தினார்.
ஆனால் இங்கு என்ன நடைபெறுகின்றது? நாம் ஆர்ப்பாட்டம் நடத்தினால் பொலிஸாரால் தாக்கப்படுகிறோம். கைது செய்யப்படுகிறோம். வடக்கில் நீதிமன்ற உத்தரவுகள் அமுல்படுத்தப்படுவதில்லை. அப்படியானால் வடக்கிற்கு சமஷ்டி கொடுக்கப்பட்டுவிட்டதா? இல்லையெனில், ஏன் அங்கு ஒரு ஆர்ப்பாட்டக்காரர்கூடக் கைது செய்யப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து பொது எதிரணி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். அப்போது எழுந்த வாசுதேவ நாணயக்கார எம்.பி., நீதிமன்றத்தை விட பாராளுமன்றமே மேலானது. நீதிமன்றம் பாராளுமன்றத்தை கட்டுப்படுத்த முடியாது என்றார்.
இந்நிலையில் ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான முஜிபுர் ரஹ்மான் எழுந்து ஏதோ கூறியபோது, மிகவும் ஆவேசப்பட்ட பொது எதிரணி எம்.பி.க்கள் அவருக்கு எதிராக கூச்சலிட்டனர்.
இதன்போது மீண்டும் எழுந்த தினேஷ் குணவர்தன எம்.பி., 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக நாம் அப்போது எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த அநுர பண்டாரநாயக்க தலைமையில் கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றபோது அப்போது ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர். ஜெயவர்தன ஊரடங்குச் சட்டம் பிறப்பித்து ஆர்ப்பாட்டத்தைத் தடுக்க முயன்றார்.
ஆனால் நாம் ஊரடங்குச் சட்டத்திலும் ஆர்ப்பாட்டம் செய்தோம். ஜே.ஆர். ஜயவர்தன எங்களில் ஒருவரைக்கூடக் கைது செய்யவில்லை. ஆனால் முதல் தடவையாக இந்த அரசு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்துள்ளது என்றார்.
ஆனால் தினேஷ் குணவர்தனவின் இக்கருத்துக்குப் பதிலடி கொடுத்த ஜே.வி.பி. தலைவரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க, 2010 ஆம் ஆண்டு மகிந்த ஆட்சியில் காலியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எமது கட்சியைச் சேர்ந்த விஜித ஹேரத் எம்.பி. பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டார்.
வரலாற்றினை மறைக்க முடியாது. ஆனால் அந்தக் கரும்புள்ளி மீண்டும் இடம்பெறாதெனக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசும் அதே கரும்புள்ளியை ஏற்படுத்துவது தவறு என்றார்.
பா.கிருபாகரன், டிட்டோகுகன்
Post a Comment