Header Ads



மந்திரத்தை நம்பியதால், ஏற்பட்ட பரிதாபம் - இலங்கையில் நடந்த உண்மைச் சம்பவம்

காதலரை மந்திரத்தால் வீழ்த்தும் முயற்சிக்காக நடைபெற்ற கொள்ளைச்சம்பவம் தொடர்பில் தமிழ் பெண் மந்திரவாதி உள்ளிட்ட மூவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வீடொன்றில் 670,000 ரூபா பணம் திருடியமை தொடர்பில் அந்த வீட்டின் பணிப்பெண் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய அதனுடன் தொடர்புடைய தமிழ் மந்திரவாதி பெண் ஒருவரும் முஸ்லிம் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

”நினைப்பதெல்லாம் கிடைக்கும்” என்ற விளம்பரத்தை குறித்த தமிழ் பெண் மந்திரவாதி பத்திரிக்கைகளில் வெளியிட்டிருந்தார். இதனைப் பார்த்த பலகொல்ல பிரதேசத்தை சேர்ந்த வீட்டு பணிப்பெண் ஒருவர் ”எனது காதலன் எனக்கு கிடைக்கவேண்டும், முடியுமா?” என்று விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

இதனால் குறித்த பெண் மந்திரவாதி, தன்னால் செய்யமுடியும் என்றும் தனது கணக்கிற்கு 5,000 ரூபா பணத்தை வைப்பிடுமாறு பணிப்பெண்ணிடம் கூறியுள்ளார். பணம் வைப்பிட்ட பின்னர் காதலனை பெற்றுக் கொள்வதற்காக காளி அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டும் என கூறி அதற்கும் மேலதிகமாகப் பணம் கோரியுள்ளார்.

இதற்கு மேலதிக பணம் இல்லாத நிலையிலேயே அதனைப் பெற்றுக் கொள்வதற்காக குறித்த பணிப்பெண் தான் வேலை செய்த வீட்டில் தங்க நகைகளைத் திருடியுள்ளார்.

குறித்த மந்திரவாதி அக்குரனை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் விசாரணைகளை  மேற்கொண்டதில்  அவருக்கு உதவிய முஸ்லிம் இளைஞர் ஒருவரும் கட்டுகஸ்தொட்டை பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தமிழ் பெண் மந்திரவாதி  யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் தமிழ் மக்களின் பணத்தை மோசடி செய்துள்ளதாகவும், அவரது கணக்கில் தற்போது 4 லட்சம் ரூபாய் பணம் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண் மந்திரவாதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 5000 ரூபா ரொக்கப் பிணையிலும், 3 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.