லிப்ட் இயங்காமையால் முகூர்த்த நேரம் மிஸ் ஆனது - 50 இலட்சம் நஷ்டஈடு கேட்கும் சட்டத்தரணி
தனது திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மின்னுயர்த்தியினுள் (லிப்ட்) வெகுநேரமாக தான் சிக்குண்டதால் திருமணத்துக்கான முகூர்த்த நேரம் கடந்த நிலையில் சம்பிரதாயங்கள் எதனையும் மேற்கொள்ளாது பதிவுத் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு குறித்த 5 நட்சத்திர ஹோட்டல் நிர்வாகத்தால் தான் அசெளகரியத்துக்கு உள்ளானதாக மணமகனான சட்டத்தரணி வருண நாணயக்கார அந்த ஹோட்டலுக்கு எதிராக நட்டஈடுகோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், திருமண தினத்தன்று மின்னுயர்த்தியில் சிக்குண்டு தான் அசெளகரியத்துக்குள்ளானமைக்கு நட்டஈடாக குறித்த ஹோட்டலிடம் 50 இலட்சம் ரூபா நட்டஈடுகோரி அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு மாவட்ட நீதிபதி ஜயகி அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் வாதியான சட்டத்தரணியான வருண நாணயக்கார சாட்சியமளித்தார்.
நுகேகொடை உடஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சட்டதரணியான வருண நாணயக்கார 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 22 ஆம் திகதி தனது திருமண தினத்தன்று திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த ஹோட்டலின் கீழ் தளத்திலிருந்து 10 மாடியை நோக்கி மின்னுயர்த்தியின் மூலம் தனது தாய், தந்தையுடன் சென்று கொண்டிருந்தபோது 1 ஆம் மற்றும் 5 ஆம் மாடிகளுக்கு இடையில் குறித்த மின்னுயர்த்தி பாரிய சத்தத்துடன் சடுதியாக நின்றுள்ளது.
அதன்போது சுமார் 10 நிமிடங்களுக்கு தாம் மின்னுயர்த்தியினுள் சிக்குண்டதுடன் மின்துண்டிப்பால் ஏற்பட்ட இருளைப் போக்க கைத்தொலைபேசி வெளிச்சத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் உள்ளிருந்த ஒலிவாங்கி மூலம் உதவிகோரி அழைத்தபோதும் எவரும் பதிலளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து சுமார் 10 நிமிடங்களின் பின்னர் மின்னுயர்த்தி செயற்பட்டு மேல் நோக்கி பயணித்து 10 ஆவது மாடியை அடைந்த போது இறங்குவதற்கு முயற்சிக்கையில் மின்னுயர்த்தி தரையிலிருந்து 1 அடி உயரத்தில் நிறுத்தப்பட்டதால் வயதான தனது தாய் தந்தை மிகவும் சிரமத்துடன் மின்னுயர்த்தியிலிருந்து இறங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
அதன்போது மணமகன் கோலத்திலிருந்த தனது திருமண ஆடை வியர்வையில் நனைந்திருந்த நிலையில் கடும் அசெளகரியங்களுக்கு மத்தியில் சுப நேரத்தில் நிகழ்த்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சடங்குகளை மேற்கொள்ளாமலும் வாக்குறுதி அளிக்காமலும் பதிவாளர் முன்னிலையில் கையொப்பமிட்டு தான் திருமணம் செய்து கொண்டதாக சட்டத்தரணி வருண நாணயக்கார மன்றில் தெரிவித்தார்.
இந்நிலையில் இவ்வழக்கை கொழும்பு மாவட்ட நீதிபதி ஜயகி அல்விஸ் எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
Post a Comment