நாடே எதிர்பார்த்த 2 வது இதயமாற்று சத்திர சிகிச்சையும், தந்தையின் கோரிக்கையும்..!
இதய மாற்று சத்திரசிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்த களுவாமோதர பகுதியைச் சேர்ந்த சவினி செவ்வந்தியின் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து கண்டி போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக கண்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் சமன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
சவினி செவ்வந்திக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்னர் உட்செலுத்தப்பட்ட மயக்க மருந்து தொடர்பில் அவரது பெற்றோர்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
நாடே எதிர்பார்த்துகொண்டிருந்த இரண்டாவது இதய மாற்று சத்திர சிகிச்சையின் பின்னர் உயிரிழந்த சவினி செவ்வந்தியின் தந்தை களுப்பெறும சமிந்த சுகாதார அமைச்சரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
சவினி செவ்வந்தியின் இறுதி சடங்கிற்காக சுகாதார அமைச்சர் வருகை தந்திருந்த போதே இவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
குறித்த கோரிக்கையில்,
சுகாதார அமைச்சரிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகின்றேன். தயவு செய்து எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு விடயம் எந்தவொரு நோயாளிக்கும் ஏற்படாதவாறு சிகிச்சை அளியுங்கள்.
எனது மகளின் சத்திர சிகிச்சைக்கு முன்னர் மயக்க மருந்தினை உட்செலுத்திய பெண் வைத்தியர்கள் குழாம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுங்கள். எனது பிள்ளைக்காக நான் இறந்தாலும் பரவாயில்லை.
எனது மகளுக்கு வாழ்வதற்கு காணப்பட்ட ஆர்வம் சில மணித்தியாலங்களில் இல்லாமல் போனமையை நானும் எனது மனைவியும் எவ்வாறு சகித்து கொள்வது?
இவ்வாறு செவ்வந்தியின் தந்தை அழுது புலம்பியபடி சுகாதர அமைச்சரிடம் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த கோரிக்கையின்படி, நாளைய தினம் கண்டி போதான வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை நிபுணர்களுடன் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ள சமன் ரத்னாயக்க இதய மாற்று சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட இதயம் உட்பட மருந்து பொருட்கள் அனைத்தும் இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கை இன்று மாலை கிடைக்கப்பெற்றவுடன் நாளைய தினம் கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் சமன் ரத்னாயக்க மேலும் தெரிவித்தார்.
Post a Comment