இஸ்ரேலின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இன்டர்போல், பலஸ்தீன அரசுக்கு அங்கத்துவம் வழங்கியது
இஸ்ரேலின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சர்வதேச பொலிஸான இன்டர்போல் பலஸ்தீன அரசுக்கு அங்கத்துவம் வழங்கியுள்ளது.
பீஜிங்கில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இன்டர்போலின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் சொலமன் தீவுகளுடன் பலஸ்தீனத்தின் விண்ணப்பமும் அங்கீகரிக்கப்பட்டது.
பலஸ்தீனம் ஒரு தேசமாக உருவெடுப்பதற்கு உதவும் சர்வதேச அமைப்பின் அங்கத்துவத்திற்கு எதிராக இஸ்ரேல் கடும் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தது. கடந்த ஆண்டு பலஸ்தீனத்தின் விண்ணப்பம் இடைநிறுத்தப்பட்டதை இஸ்ரேல் பெரும் வெற்றியாக கருதியது.
இன்டர்போல் அங்கத்துவம் பெறுவதற்கு பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பு நாடுகளில் மூன்றில் இரண்டு ஆதரவு தேவைப்படுகிறது. இந்நிலையில் தமது அங்கத்துவத்திற்கு 75 வீதத்திற்கு அதிகமான வாக்குகள் கிடைத்ததாக பலஸ்தீன விடுதலை அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பார்வையாளர் அந்தஸ்த்தை பெற்றது தொடக்கம் பலஸ்தீனம் 50க்கும் அதிகமான சர்வதேச அமைப்புகள் மற்றும் ஒப்பந்தங்களில் இணைந்திருப்பதாக பலஸ்தீன வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவைகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் ஐ.நா கலாசார அமைப்பான யுனெஸ்கோவிலும் பலஸ்தீனம் அங்கத்துவம் பெற்றுள்ளது.
பிரான்ஸ் நகரான லியோனை தளமாகக் கொண்ட இன்டர்போல் பொலிஸ் படைகளுக்கு இடையிலான சிவப்பு அறிக்கைகளை வெளியிடுவதோடு, உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச நீதிமன்றங்களின் கோரிக்கையின் கீழ் பிடியாணைகளை பிறப்பிக்கும்.
Post a Comment