இலங்கையராக நாம், வெட்கப்பட்ட நாள்
இலங்கையராகப் பிறந்தமைக்காக நாம் எல்லாம் பெருமைப்பட்ட நாட்கள் கடந்து, இன்று வெட்கப்பட வேண்டிய காலம் வந்திருப்பது துரதிஷ்டமானது.
கடந்த செவ்வாய்க்கிழமை கல்கிசை பகுதியில் ஐ.நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பொறுப்பில் தங்க வைக்கப்பட்டிருந்த மியன்மார் நாட்டைச் சேர்ந்த 32 ரோஹிங்ய அகதிகளுக்கு எதிராக பிக்குகள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் சிலர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை முழு இலங்கையருக்குமே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளதைப் போல இவர்கள் மனிதர்கள் அன்றி மிருகங்களேயாவார்கள். மியன்மாரிலிலுள்ள மனிதாபிமானமற்ற பௌத்த பிக்குகள் மற்றும் இராணுவத்தினரின் கரங்களில் சிக்கிவிடாதிருக்க உயிர் தப்பி வந்த இந்த அகதிகள், இன்று இலங்கையிலும் இவ்வாறான மனிதாபிமானமற்ற பௌத்த பிக்குகளின் அழுத்தங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகியிருக்கிறார்கள்.
இலங்கை விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற நாடு என்று நாம் இதுவரை கட்டிக்காத்து வந்த நற்பெயரை ஒரே நாளில் காற்றில் பறக்கவிட்ட இந்த பிக்குகளின் செயலை பொலிசாரும் அரசாங்கமும் வேடிக்கை பார்த்தமைதான் அதைவிடவும் கவலை தருவதாகும். இன்று விசாரணை நடத்தப் போவதாகவும் பொலிஸ் குழுக்களை அமைத்துள்ளதாகவும் அறிவித்திருப்பது வெறும் கண்துடைப்பே அன்றி வேறில்லை.
உண்மையில் இந்த விவகாரம் இந்த நாட்டில் மனிதாபிமானத்தை நேசிக்கின்ற பௌத்த, இந்து, இஸ்லாமிய , கிறிஸ்தவ சமயங்களைப் பின்பற்றுகின்ற சகலரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் உணர்த்தி நிற்கின்றன.
குறிப்பாக அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோர் இது தொடர்பான தமது பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன் ரோஹிங்யா மக்களை இலங்கையர்களாகிய நாம் நன்றாக உபசரிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சிரியாவிலிருந்து வெளியேறிய இலட்சக் கணக்கான அகதிகளை உள்ளீர்க்க முடியாது என சில ஐரோப்பிய நாடுகள் தடைகளை விதித்து அவர்களை தமது எல்லைகளில் வைத்து அடித்து விரட்டிய காட்சிகளை கடந்த வருடம் நாம் கண்டு கவலைப்பட்டோம்.
அவர்களுக்காக அனுதாபப்பட்டோம். மனிதாபிமானமற்ற வகையில் இந்த நாடுகள் நடக்கின்றனவே என்று விமர்சித்தோம். ஆனால் இன்று நமது நாட்டிலும் இதே செயல் நடந்தேறிவிட்டது.
இலங்கையில் இனக்கலவரம் மற்றும் யுத்தம் வெடித்ததைத் தொடர்ந்து சகல சமூகங்களையும் சேர்ந்த சுமார் 20 இலட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி சர்வதேச நாடுகளில் தஞ்சமடைந்தனர். இவ்வாறான பின்புலத்தைக் கொண்ட மியன்மாரிலிருந்து உயிர்தப்பி வந்த வெறும் 32 அகதிகளை பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் தயாரில்லை என்பது வெட்கித் தலைகுனிய வேண்டியது என அமைச்சர் ராஜித கூறியிருக்கும் கருத்து இங்கு கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.
அதேபோன்று இந்த மக்களை ஒருசாரார் விரட்டியடிக்கத் துடிக்கின்ற நிலையில் அவர்களை விடவும் மிகப் பெரும்பான்மையான மக்கள் அவர்களை பொறுப்பேற்கவும் உபசரிக்கவும் முன்வந்திருக்கிறார்கள் என்பது ஆறுதலளிப்பதாகும்.
உண்மையில் இந்த அகதிகள் நாட்டுக்குள் பிரவேசித்த போது அவர்களை மீட்ட கடற்படையினர், அவர்களைப் பராமரிக்கப் பொறுப்பேற்ற ஐ.நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம், இவர்களை தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்க சட்ட ரீதியாக குரல் கொடுத்த RRT அமைப்பு, இவர்களை தமது பொறுப்பில் எடுத்து பராமரித்து வந்த அரசசார்பற்ற நிறுவனமான முஸ்லிம் எயிட் ஆகியோரும் இந்த இடத்தில் நன்றியுடன் நினைவு கூரப்பட வேண்டியவர்களாவர்.
இந்த அகதிகளை தற்போது கனடாவுக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. சில சமயங்களில் தற்போது நடந்த கசப்பான நிகழ்வின் மூலமாக, அவர்களுக்கு கனடாவில் வெகு விரைவில் இனிப்பானதொரு வாழ்வு கிடைப்பதற்கான சூழலை இறைவன் ஏற்படுத்தக் கூடும். அதற்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.
(விடிவெள்ளி பத்திரிகையில் இன்று -29- வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்)
As we muslim we must be very careful hereafter. We can't trust this government
ReplyDelete