Header Ads



"புத்தரின் பெயரைச் சொல்லிக்கொண்டு ராணுவமும், பௌத்தர்களும் கொலை, கற்பழிப்பில் ஈடுபடுவது வேடிக்கை''


ரோஹிங்யா அகதிகளின் ரத்தத்தால் சிவந்துகொண்டிருக்கிறது மியான்மர். அங்கிருந்து வங்காளதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு புகலிடம் தேடிக் கிளம்பியுள்ள அகதிகளின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டிவிட்டது. ஐ.நா. உள்பட சர்வதேச அமைப்புகளும் நாடுகளும் மியான்மர் வன்முறையைக் கைவிடவேண்டும் என அழுத்தமாகச் சொல்ல தயங்கியே நிற்கின்றன.

இதற்கிடையில், இந்திய அரசு எந்த நிமிடத்திலும் கெட்-அவுட் சொல்லலாம் என்ற பதற்றத்தில் இருக்கிறார்கள் இங்கு அடைக்கலம் புகுந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள். தொடுக்கப்பட்ட வழக்கில், ""தீவிரவாதிகளுடன் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு தொடர்பு இருப்பதால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்'' எனத் தெரிவித்துள்ளது பா.ஜ.க. அரசு.

இந்தியாவில் காஷ்மீர், அஸ்ஸாம், உ.பி, ஹரியானா, ஹைதராபாத், சென்னை உள்பட பல மாநிலங்களிலும் ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

மியான்மரில் ரோஹிங்யாக்கள் மீது தொடர்ந்துவரும் வன்முறைத் தாக்குதல் குறித்தும், அவர்கள் இடம்பெயர்ந்த வரலாறு குறித்தும் தெரிவிக்கையில்

""எங்க கதைய சொன்னா ரத்தக் கண்ணீர் வரும். ஐந்தாண்டுகளுக்கு மேல எங்களுக்கு நடக்குற கொடூரம் தொடருது. அங்க நடக்கிற மனித உரிமை மீறலைத் தட்டிக்கேட்கத்தான் எந்த நாட்டுக்கும் துணிச்சலில்லை''’தூக்கலாக பர்மிய வாசமடிக்கும் இந்தியில் பேசினார்.

""இந்த முகாம்ல மொத்தம் 93 அகதிகள் இருக்கோம். எங்க சொந்த ஊர் மியான்மர் நாட்டுல ரங்கூன் பக்கத்துல உள்ள ராக்கைன் மாகாணத்துல உள்ள மோண்டோ. அங்க 50-க்கும் மேற்பட்டவங்க வாழ்ந்து வந்தோம். காலகாலமாவே எங்க மேல தாக்குதல் நடக்குறது வழக்கம்தான். ஆனா, 2012-ல நடந்தது கொலைபாதகத் தாக்குதல்.

ஒருநாள் வழக்கம்போல வழிபாடு செய்யப்போயிருந்தோம். திடீர்னு மோண்டோ மசூதிமேல ஒரு கும்பல் தாக்குதல் நடத்துச்சு. அந்த தாக்குதல்ல என்னோட வழிபாடு செஞ்ச 10-க்கும் மேற்பட்டவங்க கொலைசெய்யப்பட்டாங்க.

நானும் எங்க மாமா ஒருத்தரும் தாக்குதல்ல இருந்து தப்பிச்சு ஊருக்குள்ள வந்தோம். ஒரு தாக்குதல்ல தப்பிச்சு வந்தா, அங்க ராணுவம் எங்க மேல துப்பாக்கிச் சூடு நடத்துச்சு. வீட்டையெல்லாம் சூறையாடி தீவெச்சுக் கொளுத்தினாங்க. அதுல எங்க வீடும் பொசுங்கிப் போச்சு. பற்றியெரியிற நெருப்புல கையில அகப்பட்ட சிறு குழந்தைகளையெல்லாம் தூக்கிவீசுனாங்கன்னு சொன்னா, அவங்களோட தீவிரத்தை நீங்க புரிஞ்சுக்குவீங்க.

ஒருபுறம் ராணுவம், மறுபுறம் புத்தமதத்தைச் சேர்ந்த நாசக்காரங்க எங்க உயிரையும் உடைமையையும் சூறையாடினாங்க. கையில அகப்பட்ட பெண்களையெல்லாம் ராணுவ முகாமுக்குத் தூக்கிட்டுப் போய் கற்பழிச்சுக் கொன்னாங்க. சில பெண்களை செக்ஸ் அடிமையா வெச்சுக்கிட்டாங்க.

கர்ப்பிணியா இருந்த என் தங்கையை, துப்பாக்கியோட பானெட் கத்தியால இரக்கமில்லாம குத்தி கொடூரமா கொலைசெஞ்சு போட்டிருந்தாங்க. அன்னைய தாக்குதல்ல உயிர்பிழைச்சவங்க, இறந்துபோன எங்க உறவுகளைக்கூட அடக்கம்செய்யாம அப்படியே விட்டுட்டு ரங்கூனுக்குத் தப்பிவந்தோம். ஒரு ஏஜென்ட் மூலமா படகில் வங்கதேசத்துக்கு வந்து, கடைசியில இந்தியாவுக்குள்ள வந்தோம். கொல்கத்தாவுல இருந்து ரயில் மூலமா சென்னைக்குள்ள நுழைஞ்சோம்.

இந்திய அரசும் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. அருகிலுள்ள சமுதாயக் கட்டடத்துல தங்கவெச்சாங்க. அப்புறம் நாங்க இப்ப இருக்கிற முகாமை கட்டித் தந்தாங்க. நாங்க ஓ.எம்.ஆர்.ல கட்டட வேலைகள் கொஞ்சம் கிடைக்கிறதால வேலைசெஞ்சு பிழைச்சுக்கிட்டிருக்கோம்.

நாங்க அகதிகள்தான். இது எங்க நாடு கிடையாது. எங்களுக்கும் நாடுதிரும்ப ஆசைதான். எங்க சொந்த நாட்டுக்குத் திரும்ப, உலக நாடுகள்தான் ஏதாவது செய்யணும். அங்க எங்களுக்கான அடிப்படை உரிமைகளும், குடியுரிமையும் கிடைச்சுடுச்சுன்னா நாங்க நாடு திரும்பிடமாட்டோமா'' என்று ஏக்கமாகக் கேட்கிறார்.

மற்றொரு ரோஹிங்யா முஸ்லிமான தில்அகமது, “""இந்த முகாம்ல 19 குடும்பங்களைச் சேர்ந்த 93 பேர் இருக்கோம். இப்ப பர்மாவோட அதிபரா, வெளியுறவுத் துறை அமைச்சரா ஆங்சான் சூகி இருக்காங்க. அமைதிக்கான நோபல் பரிசு வாங்குனவங்க. வாங்கின விருது அர்த்தப்படறதுக்காகவாவது அவங்க ஏதாவது முயற்சியெடுத்தா நல்லாயிருக்கும். என் அக்கா இன்னும் சிறையிலதான் இருக்காங்க. ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஜாமீனும் கிடையாது. நாங்க அந்த நாட்டுல படிக்கவும் முடியாது. படிச்சாலும் வேலை கிடையாது''’என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அஸ்மா தன் கண்ணீர்க் கதையைப் பகிர்ந்துகொண்டார். ""என் சகோதரிங்க இரண்டு பேரை ராணுவம் தூக்கிட்டுப் போயிடுச்சு. அவங்களைக் காப்பாத்தப் போன என் அண்ணனை சுட்டுக் கொன்னுட்டாங்க. சகோதரிங்க இப்ப உயிரோட இருக்காங்களா செத்துட்டாங்களானுகூட தெரியலை.

புத்தரின் பெயரைச் சொல்லிக்கொண்டு ராணுவமும், பௌத்தர்களும் கொலை, கொள்ளை, கற்பழிப்பில் ஈடுபடுவதுதான் வேடிக்கை'' என்கிறார் கசப்பான புன்னகையுடன்.

ஒரே நம்பிக்கையான இந்தியாவும் தங்களுக்கு எதிராக செயல்படுவதன் அச்சம் அவர்கள் கண்களில் தெரிகிறது.

- Nakkheeran

3 comments:

  1. இஸ்லாமிய நாட்டு தலைவர்களின் வாயிலே நல்ல புட்டு இருவி போல ஒருதன் சரி உஜாரா முன் வந்து நாங்கள் எங்களுடைய சகோதர்களை காப்பாற்ற அல்லது அவர்கள் பாதுகாப்புக்காக UN மூலமாக அமைதிப்படை அனுப்புவோம் என்று சும்மா சரி வாயே திறக்குறாங்கள் இல்லையே.

    ReplyDelete
  2. இதற்கு ஒரே பதில் செயெலால் அதேவேதனையை அவர்களுக்கு உணர்த்தவேண்டும். ஈவிரக்கமற்ற முறையில்....

    ReplyDelete
  3. அல்லாஹ் இரிக்கான் இன்ஸாஆல்லாஹ் கூடியா சீக்கிரம் பர்மாவின் விதி மாரூம்

    ReplyDelete

Powered by Blogger.