டுபாயில் உருவாகும் செவ்வாய் கிரக மாதிரி உலகம்
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் சூழ் நிலையை அறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில சர்வதேச தனியார் நிறுவனங்கள் அங்கு புதிய காலனி அமைத்து அங்கு மனிதர்களை குடியேற்ற முயற்சி மேற் கொண்டு வருகிறது. அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
தற்போது இத்தகைய நடவடிக்கையில் ஐக்கிய அமீரகம் (யூ.ஏ.இ.) நாடுகள் இறங்கியுள்ளது. இதற்காக துபாயில் செவ்வாய் கிரகம் போன்ற அமைப்பில் ஒரு மாதிரி உலகம் உருவாக்கப்படுகிறது.
அதற்காக 19 லட்சம் சதுர அடி பரப்பளவில் ராட்சத கூண்டு அமைக்கப்படுகிறது. இது துபாயின் மையப் பகுதியில் பாலைவனத்தில் உருவாக்கப்படுகிறது. அதற்காக ரூ.879 கோடி (100 மில்லியன் டாலர்) செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு செவ்வாய் கிரக அறிவியல் நகரம் என பெயரிடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு இந்த வாரத்தில் நடைபெற உள்ள ஐக்கிய அமீரக நாடுகளின் கூட்டத்தில் வெளியாகிறது.
இந்த மாதிரி உலகத்தில் மனிதர்களை தங்க வைத்து செவ்வாய் கிரகத்தில் வாழக் கூடிய சூழ்நிலை பயிற்சி உருவாக்கப்படுகிறது. பயிற்சியாளர்கள் வெளி உலகத்தை அறியா வண்ணம் ஒரு வருடம் தங்கியிருக்க வேண்டும்.
மாதிரி உலகத்துக்குள் தங்கியிருப்பவர்களுக்கு தேவையான ஆக்சிஜன், உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்படும். இது குறித்து துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் கூறியதாவது:-
செவ்வாய் கிரகத்தில் மக்களை தங்க வைக்கும் முயற்சியில் சர்வதேச நாடுகள் ஈடுபட்டுள்ளன. அதற்கு முன்னோடியாக விளங்க ஐக்கிய அமீரகம் விரும்புகிறது. அதற்கான முயற்சியே இத்தகைய நடவடிக்கையாகும்.
இன்னும் 100 ஆண்டுகளில் அதாவது 2117-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மக்களை குடியமர்த்த திட்ட மிட்டுள்ளோம் என்றார்.
இதற்கிடையே, செவ்வாய் கிரகத்தில் காலனி அமைக்கும் திட்டத்துக்கு முன்னோடியாக சந்திரனில் நிரந்தரமான கிராமம் அமைக்க ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்காக 4 ஆயிரம் விண்வெளி நிபுணர்கள் பங்கேற்கும் கூட்டம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.
Post a Comment