தெஹிவளை மிருககாட்சி சாலையை, இரவில் திறப்பதற்கு எதிர்ப்பு
கொழும்பு தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள இலங்கையின் பிரதான மிருக காட்சி சாலையை இரவு நேரத்தில் மக்கள் பார்வையிடுவதற்கு திறந்து வைக்க அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.
தெஹிவளை மிருக காட்சி சாலை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் வாரத்திற்கு மூன்று நாட்கள் இரவு 7.30 மணி முதல் 10.00 மணிவரை திறந்துவைக்கப்படும் என்று மிருக காட்சி சாலையின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வன விலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா மிருக காட்சி சாலையில் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே இரவு நேரத்தில் மக்கள் பார்வையிட திறந்து வைக்கப்படுமென்று கூறினார்.
இதன்படி, வெள்ளி , சனி , ஞாயிறு ஆகிய நாட்களில் மிருக காட்சிசாலை மக்கள் பார்வையிட இரவு நேரத்தில் திறந்து வைக்கப்படுமென்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஆனால் இதனை அனுமதிக்க முடியாதென்று கூறிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவின் தலைவர் ரவீந்திரநாத் தாபரே, இந்த திட்டத்தின் மூலம் மிருகங்களின் சுதந்திரத்திற்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரித்திருக்கிறார்.
குறிப்பாக, சில மிருகங்கள் இரவு நேரத்தில் தூங்க வேண்டியது மிக முக்கியமானதென்று தெரிவித்த ரவீந்திரநாத் தாபரே மக்கள் நடமாட்டம் அதிகரித்தால் அவற்றின் தூக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அதன் முலம் விலங்குகளின் சுகாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, மிருக காட்சி சாலைகள் தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கும்போது, அரசு அதிகாரிகள் பொதுமக்களின் நலன்களை மட்டுமல்ல, மிருகங்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், தீர்மானங்களை எடுக்க வேண்டுமென்றும் அவர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள வன விலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா இரவு நேரத்தில் செயல்படுகிற விலங்குகள் வசிக்கும் பகுதிகள் மட்டுமே இரவு நேரத்தில் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் இரவு நேரத்தில் தூங்கும் ஏனைய விலங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரவு நேரத்தில் மிருக காட்சி சாலைக்கு செல்லும் மக்கள் விலங்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவது மற்றும் அவற்றை படம் பிடிப்பது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு மிருக காட்சிசாலை நிர்வாகம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு அபராதம் விதிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிருக காட்சி சாலை நிர்வாகம் எச்சரித்துள்ளது.
(பிபிசி)
Post a Comment