"ரணில் உங்கள் நண்பர்தானே" எனக்கூறி மகிந்தவுக்கு நெத்தியடி கொடுத்த சம்பந்தர்
புதிய அரசியல் அமைப்பு விடயத்தில் அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என அவரிடம் கேட்டுக்கொண்டேன் எனவும் மாநாயக்க தேரர்களை விரைவில் சந்தித்து அரசியல் அமைப்பு குறித்து பேசவுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று பின்னிரவு இடம்பெற்ற செய்தி ஆசிரியர்கள் சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் வினவியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
"அவரது இல்லத்தில் நான் சந்திப்பை முன்னெடுத்தேன், அதன்போது அவர் தன்னை சிறையில் தள்ளுவதற்கு முயற்சிக்கின்றனர் என்று கூறினார். அப்போது ரணில் உங்களுடைய நண்பர் தானே என்று நான் கூறினேன். அதன்போது ரணில் நண்பர் தான். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எனக்கு எதிராக செயற்படுகிறார் என்று சுட்டிக்காட்டினார்.
எனினும் இந்த அரசியல் அமைப்பு விடயத்தில் அனைவரதும் ஆதரவு எமக்கு வேண்டும். அதற்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை எதிர்க்காது இருந்தால் அது எமக்கு உதவியாக இருக்கும் என்றேன்,இவ்வாறு சிநேகபூர்வமாக இந்த சந்திப்பு இடம்பெற்றது"
கேள்வி:- தீர்வு திட்டம் தொடர்பில் மாநாயக்க தேரர்களை சந்திக்க திட்டம் உள்ளதா?
பதில்; ஆம், அவ்வாறான ஒரு திட்டம் உள்ளது, ஒருமித்த நாட்டுக்குள் ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என கோருகின்றோம், அதை ஏன் நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள் என்பதை அவர்களிடம் கேட்க வேண்டும். பெளத்த மதம் இந்த நாட்டில் பிரதானம் என்பதற்கு நாம் இணங்கத்தயார். ஆனால் ஏனைய மதங்களும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். பாதகம் ஏற்படாத வகையில் சில விடயங்களை விட்டுக்கொடுப்பதில் பாதிப்பு இல்லை. ஒட்டுமொத்தமாக நாம் தீர்வை நோக்கி சிந்திக்க வேண்டும். தேசிய ரீதியிலும், மாகாணமட்ட அதிகார பகிர்வு, உள்ளூராட்சி மட்ட அதிகாரங்கள் என மூன்று அடிப்படையில் அமையும். இந்த அதிகாரங்களை அந்தந்த மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டு மக்களுக்கான பூரண சுதந்திரம் அமைய வேண்டும் என்பதையே நாம் கோருகின்றோம். அவ்வாறான ஒரு தீர்வு வரவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அது தீர்வே அல்ல.
கேள்வி:- கோத்தாபய ராஜபக்ஷவின் புதிய வியூகம் தொடர்பில் எவ்வாறு சிந்திக்கின்றீர்கள்?
பதில்:- அவரது கூட்டத்தின் பின்னர் எந்த கருத்தும் வெளிவரவில்லை, இந்த கூட்டங்கள் மஹரகம பகுதியில் இடம்பெற்றன. மக்கள் அதிகளவில் பங்குபற்றியுள்ளனர். ஆனால் அதன் பின்னர் எந்த காரணிகளும் இல்லை. ஆனால் இது குறித்து நாம் ஆராய்ந்த போது இது பெரிய வெற்றியை பெறாது என கூறுகின்றனர். ஆகவே பொறுத் திருந்து பார்க்க வேண்டும்" என்றார்.
Post a Comment