"உங்கள் பேச்சை கேட்காமல் இருந்தது, நான் செய்த தவறாகும்"
உங்கள் பேச்சை கேட்காமல் இருந்தது நான் செய்த தவறாகும் என முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்தார் என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டியு குணசேகர தெரிவித்துள்ளார்.
அக்கட்சியின் 21ஆவது தேசிய சம்மேளனம் நாரஹேன்பிட்டி ஷாலிகா மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு மகிந்த ராஜபக்ச குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
எமது கட்சியின் 20ஆவது சம்மேளனம் 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற போது, நாட்டின் அரசியலில் 2015 ஆம் ஆண்டு பாரிய மாற்றம் இடம்பெறலாம் என்று அன்று நான் மகிந்த ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டியிருந்தேன்.
அதுமாத்திரமல்லாது அடுத்து வந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இவ்விடயம் தொடர்பாக 2 மணிநேரம் நான் மகிந்தவிடம் தெளிவுப்படுத்தினேன்.
எவ்வாறிருப்பினும் தேர்தலுக்கு சென்றால் நிச்சயமாக தோல்வியடைவோம் என்று அரசியல் எதிர்வு கூறலாக அதை அவருக்கு தெரிவித்தேன்.
உண்மையில் தேர்தலில் என்னுடைய எதிர்வு கூறல்தான் நிகழ்ந்தது. இதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ என்னிடம் வந்து உங்கள் பேச்சை கேட்காமல் இருந்தது நான் செய்த தவறாகும் என்று குறிப்பிட்டார்.
இதேவேளை, இன்று அரசியல் எதிர்வு கூறல்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை அரசியல் வாதிகளிடம் இல்லை. எதிர்கால அரசியல் நிலைமைகளை அறிந்துகொள்ள சாஸ்திரக்காரர்களிடம் செல்லும் நிலையே ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
Post a Comment