அமெரிக்க ஆளுநர் தேர்தலில், இலங்கை பெண்
அமெரிக்காவின் மேரிலாந்து பகுதியில் இடம்பெறவுள்ள ஆளுநர் தேர்தலில் இலங்கை பூர்வீகத்தை கொண்ட தமிழ் பெண் ஒருவர் போட்டியிடவுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது நாட்டை விட்டு சென்ற பெற்றோருக்கு பிறந்த கிரிஷாந்தி விக்னராஜா என்ற இலங்கை பெண்ணே தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
இலங்கை பூர்வீகத்தை கொண்ட அமெரிக்க பெண்ணான கிரிஷாந்தி பிறந்த 9 மாதங்களாக இருந்த போது, இலங்கையின் உள்நாட்டுப் போரின் காரணமாக தப்பிச் சென்ற அவரது குடும்பத்தினர் மேரிலாந்தில் குடியேறினர்.
அமெரிக்காவின் முன்னாள் முதற்பெண்மணி மிச்ஷேல் ஒபாமாவின் கொள்கை இயக்குனராக செயற்பட்ட கிரிஷாந்தி விக்னராஜா, மேரிலாந்து ஆளுநருக்கான போட்டியில் நுழைவதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதற்கமைய தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தவர் தனது வாக்குறுதிகளை பட்டியலிட்டுள்ளார். அவற்றில் பிரதானமாக அதிவேக இணையத்தை வழங்குவதாகவும், 250,000 புதிய தனியார் துறை வேலைகளை உருவாக்குவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கல்விக்காக செலவழிப்பதாகவும் அவர் வாக்குறுதியளித்துள்ளார்.
மேரிலாந்தில் அதன் 14 மத்திய மற்றும் மாநில அளவிலான அலுவலகங்களுக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் பெண்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை பலருக்கும் வெளிப்படுத்துவதற்கு முயற்சிப்பதாக தனது பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டுள்ளார்.
மேரிலாந்து மக்கள் சிறந்த ஆணின் சேவையை ஒரு பெண்ணிடம் இருந்து பெற்று கொள்வதை ஏற்றுக் கொள்வார்கள் என தான் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.
பொது அலுவலகங்களின் பெண்களின் தேவை அதிகமாக காணப்படுகின்றது. அதற்காகவே தான் போட்டியிடுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
37 வயதான கிரிஷாந்தி கடந்த ஒபாமா நிர்வாகத்தின் போது, அவர் முதல் பெண்மணி மிச்ஷேல் ஒபாமாவின் கொள்கை இயக்குனராகவும், வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் மாநில செயலாளர் ஜோன் கெரி ஆகியோரின் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
இதேவேளை, 2018ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு போட்டியிடும் முதல் பெண் கிரிஷாந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment