இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களுக்குள், ஸெய்த் ஹுசெய்ன் தலையிடு - தினேஷ் குணவர்த்தன
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களுக்குள் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் ஸெய்த் ராஅத் அல் ஹுசெய்ன் தலையிடுவதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஹுசெய்ன் அண்மையில் வெளியிட்டுள்ள கருத்துப் பற்றிப் பேசியபோது, கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இவ்வாறு தெரிவித்தார்.
ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 36வது அமர்வில் கலந்துகொண்டு பேசிய ஹுசெய்ன், சர்வதேச மனித உரிமை அமைப்பின் விதிமுறைகளுக்கு அமைய இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
மேலும், சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மீறுவது குறித்து இலங்கை நம்பகமான நடவடிக்கைகள் எதையும் எடுக்காத பட்சத்தில், இலங்கையின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்த சர்வதேச நீதிபதிகளின் விசாரணை தவிர்க்கப்பட முடியாததாகிவிடும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இவற்றை மேற்கோள் காட்டிப் பேசிய அமைச்சர் தினேஷ் குணவர்தன, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, இவ்விவகாரம் குறித்து உடனடியாக அறிக்கையொன்றை விடுவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Post a Comment