குழந்தை பண்ணையாக விளங்கிய இலங்கை - ஆவணப்படத்தின் மூலம் உண்மைகள் அம்பலம்
இலங்கை ‘குழந்தைகள் பண்ணை‘யாக விளங்கியமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குழந்தையில்லாத தம்பதியினர் இலங்கைத் தாய்மாரிடம் இருந்து குழந்தைகளை ‘வாங்கி’ச் சென்றுள்ளதாக அந்த ஆவணப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாயிரம் ரூபாவுக்கு, புதிதாய்ப் பிறந்த தனது குழந்தையை விற்ற இலங்கைத் தாயொருவர், அந்தக் குழந்தையை ஒரேயொரு முறை தன் கண்ணாரக் காண வேண்டும் என்றும், அதைத் தவிர வேறெதுவும் வேண்டாம் என்றும் அந்தப் படத்தில் கண்ணீருடன் கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
குறித்த காலப் பகுதியில் மட்டும் சுமார் பதினோராயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஐரோப்பிய நாட்டுத் தம்பதியருக்குத் தத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் சுமார் நான்காயிரம் குழந்தைகள் நெதர்லாந்திலும் ஏனைய குழந்தைகள் ஸ்வீடன், டென்மார்க், ஜேர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியத்திலும் வாழ்ந்து வருவதாகவும் தெரியவருகிறது.
இது பற்றி குறித்த ஆவணப் படத்தில் கருத்துத் தெரிவித்திருக்கும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, அக்காலகட்டத்தில் இலங்கையில் குழந்தைகள் பண்ணைகள் இயங்கியமை உண்மைதான் என்று ஒத்துக்கொண்டுள்ளதுடன், குழந்தைகள் தத்துக் கொடுப்பதை ஒரு வியாபாரமாக நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோரைக் கண்டுபிடிப்பதற்கு உதவியாக, மரபணு தகவல் திரட்டு ஒன்றைத் தயாரிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
குழந்தையின் பெற்றோர் மற்றும் குழந்தையைத் தத்தெடுப்பவர்கள் என இரு தரப்பினருமே தவறான தகவல்களை அளித்திருப்பதால், குழந்தைகளின் உண்மையான பெற்றோரைக் கண்டறிவதில் கடும் சிரமம் இருப்பதாகவும் அந்தப் படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில், இம்மாதிரியான குழந்தைகள் பண்ணை ஒன்று முற்றுகையிடப்பட்டு இருபது குழந்தைகள் காப்பாற்றப்பட்டதையடுத்து, 1987ஆம் ஆண்டு, இலங்கையில் பிறக்கும் குழந்தைகளை வெளிநாடுகளுக்குத் தத்துக் கொடுப்பது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டது.
இவ்வாறான பண்ணைகளில், கர்ப்பிணிப் பெண்கள் சிறைச்சாலைகளுக்கு நிகரான பத்துக்குப் பத்து என்ற விஸ்தீரணம் கொண்ட அறைகளில் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment