Header Ads



தேர்தல்களை பிற்போடுவதற்கான யுக்தியை, அரசாங்கம் மிக தந்ததிரமாக மேற் கொண்டுள்ளது

"அதிரடியாக மாகாண சபைத் தேர்தல்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதன் ஊடாக மாகாண சபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கான மற்றுமொரு யுக்தியை அரசாங்கம் மிக தந்ததிரமாக மேற் கொண்டுள்ளது. தேர்தல்களை பிற்போடுவதன் ஊடாக மக்களின் வாக்குரிமையைத் தொடர்ந்தும் பறிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஜனநாயக விரோதமானதும், கண்டிக்கத்தக்கதுமாகும். சிறுபான்மை மக்களின் பிதிநிதித்துவத்தனை கடுமையாக பாதிக்க கூடிய மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் முறையினை அரசாங்கம் அவசர அவசரமாக திணிக்க முயற்சிக்கிறது.  மக்கள் பிரதிநிதிகள் இதனை பாராளுமன்றத்தில் நிராகரிக்க வேண்டும்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வலியுறுத்திக் கோரியுள்ளது.

நேற்று (19.9.2017) பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மாகாண சபை தேர்தல்கள் திருத்த சட்டமூலம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றினை NFGG வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்படுள்ளது.mஅதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"அரசாங்கம், மாகாண சபைத் தேர்தல்களை பிற்போடும் எண்ணத்தில் 20 ஆவது திருத்த மூல சட்டத்தை கொண்டு வந்தது. இது மாகாண சபைகளில் பல சர்ச்சசைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த 20 அவது திருத்தத்தினை மேற் கொள்வதற்கு பாராளுமன்றத்தில்  மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் எனத் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனை நேற்றைய தினம் (19.09.2017) சபாநாயகர் பாராளுமன்றத்தில் உத்தியோக பூர்வமாக அறிவித்திருந்தார்.

எனவே, 20 ஆவது திருத்தத்தின் ஊடாக 2017 செப்டம்பர், ஒக்டோபர் மாதங்களில் கலையவுள்ள மாகாண சபைகளின் தேர்தல்களைப் பின்போடுவதற்கான அரசாங்கத்தின் திட்டம் தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில் , அதிரடியாக மாகாண சபைத் தேர்தல்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதன் ஊடாக உடனடியாக நடத்த வேண்டிய மாகாண சபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கான மற்றுமொரு யுக்தியை அரசாங்கம் மிக தந்ததிரமாக மேற் கொண்டுள்ளது. இவ்வாறு தேர்தல்களை பிற்போடுவதன் ஊடாக மக்களின் வாக்குரிமையைத் தொடர்ந்தும் பறிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஜனநாயக விரோதமானதும், கண்டிக்கத்தக்கதுமாகும்.

அத்தோடு, மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் அவசர அவசரமாக திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிப்பதும் போதிய கலந்துரையாடல்களுக்கு இடமளிக்காமல் அதனை நிறைவேற்ற முயற்சிப்பதையும் எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள MPP என்று சொல்லப்படுகின்ற கலப்பு விகிதாசார முறை சிறிய கட்சிகளினதும் சிறுபான்மை மக்களினதும் போதிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யுமா  என்ற பல சந்தேகங்கள் ஏற்கனவே இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலுக்கான புதிய தேர்தல் முறையினை ஒரே நாளில் சமர்ப்பித்து அன்றே குழுநிலையில் விவாதித்து அதனை சட்டமாக்குவதென்பது ஜனநாயக விரோத செயலாகும்.

இந்த நடை முறையானது நாட்டு மக்கள் அனைவரது ஜனநாயக உரிமையை மீறும் ஒரு செயற்பாடு மாத்திரமின்றி இவ்வாறான நடைமுறைகள் நாட்டின் ஜனநாயக வழிமுறைகளுக்கு பாரிய சவாலாகும்.

புதிய தேர்தல் திருத்தமானது மாகாண சபைகளில் சிறிய கட்சிகளினதும் சிறுபான்மை மக்களினதும் போதிய பிரதிநிதித்துவத்தை உத்தரவாதப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பரந்தளவில் கலந்துரையாடப்பட்டே இறுதி முடிவுகளுக்கு வர வேண்டும். இவ்வாறான தேர்தல் முறைகளில் போதிய கலந்துரையாடல்களுக்கு உட்படுத்தி அதனை செய்வதற்கான போதிய அவகாசம் கடந்த இரண்டரை வருடங்களாக இந்த அரசாங்கத்திற்கு இருந்தது. அப்படியிருந்தும் அவ்வாறு செய்யாமல் இதனை ஒரே நாளில் சட்டமாக்க முயற்சிப்பதானது  பாரிய சந்தேகங்களையும், கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, பாராளு மன்றத்திலே அங்கம் வகிக்கின்ற அரசியல் கட்சிகள் குறிப்பாக தமிழ் முஸ்லிம் கட்சிகள் இவ்விடயத்தில் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இந்த சட்டம் குறித்த போதிய கலந்துரையாடலுக்கான அவகாசத்தை அவர்கள் கோர வேண்டும். அவ்வாறு செய்யாமல் அரசாங்கம் இதனை வாக்கெடுப்புக்கு விடுமாயின் பாராளுமன்றத்தில் உள்ள சிறிய கட்சிகளும், தமிழ் முஸ்லிம் கட்சிகளும் அதற்கெதிராக வாக்களித்து அதனை நிராகரிக்க வேண்டும். தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் சார்பாக அவர்கள் நிறைவேற்ற வேண்டிய அடிப்படை கடமை இதுவாகும் என்பதனை அவர்கள் மறந்து விடக் கூடாது."

1 comment:

  1. மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டம் முஸ்லிகளுக்கு பாதகமானது என்பதை மக்களுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வூட்டுவதற்கு NFGG கூட மறந்து விட்டதா? அல்லது நீங்களும் சமூகத்தை விட்டு கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிண்றீர்களா? இருக்கின்ற கட்சிகளில் NFGG மீது ஓரளவு நம்பிக்கையுள்ளது. அதனை சரிவர தக்கவைப்பது உங்களின் செயற்பாடுகளில் உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.