2 மணிநேரம் முடங்கிய, கட்டுநாயக்க விமான நிலையம் – பயணிகள் அவதி
கட்டுநாயக்க விமான நிலையத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையால், நேற்று பிற்பகல் விமான நிலையத்தில் பயணிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகினர்.
சிறிலங்கா நேரப்படி நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்த தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டது. மாலை 4.30 மணி வரை இந்த நிலை நீடித்தது. இது உலகம் முழுவதிலும், உள்ள விமான நிலையங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயணிகளின் ஆவணங்களைச் சோதனையிடும் இணையவழி வலையமைப்பிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இணையவழி சோதனைகள் முடங்கியதால் உள்வரும், வெளிச்செல்லும் பயணிகளை அனுமதிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.
அதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில், கணினிகளின் கடவுச்சீட்டு விபரங்களை பரிசோதிக்க முடியாதிருந்த போதிலும், பயணிகளுக்கான பயண அட்டைகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
உலகில் சுமார் 100இற்கும் மேற்பட்ட விமானசேவை நிறுவனங்களுக்கு இணையவழி பரிசோதனை மென்பொருளை வழங்கி வரும், அமாடியஸ் நிறுவனத்தின் பிரதான வழங்கல் மையத்திலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
லண்டனின் ஹீத்ரோ, மற்றும் கட்விக், பாரிஸ், சிங்கப்பூரின் சாங்கி, ஜொகனஸ்பேர்க், மெல்பேர்ண், சூரிச் மற்றும் வொசிங்டனின் றீகன் விமான நிலையம் போன்றனவும் இந்த தொழில்நுட்ப பிரச்சினையால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Post a Comment