Header Ads



மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், 150 பேர் பலி, 30 பள்ளி குழந்தைகளை காணோம்...!


மத்திய மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் உள்ள பல கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தால் இடிந்துள்ளன.

பள்ளிக்கூடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததாகவும், 30 பள்ளி குழந்தைகளை காணவில்லை என்றும் மெக்சிகோ அதிபர் என்ரிக் பினா நியேடோ தெரிவித்துள்ளார்.

கட்டட இடிபாடுகளுக்கு அடியில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என மீட்பு பணியாளர்கள் தேடி வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பாதி அளவு இடிந்த ஒரு பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் சிக்கியிருக்ககூடும் என்று செய்திகள் வந்துள்ள நிலையில், மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மோரிலோஸ் மற்றும் புபலா மாநிலங்களில் கடுமையான சேதத்தை உருவாக்கியுள்ள இந்த நிலநடுக்கம் 7.1 என்று ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழும் மெக்சிகோவில் இந்த மாத தொடக்கத்தில் நாட்டின் தெற்கு பகுதியில் 8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குறைந்தது 90 பேர் உயிரிழந்தனர்.

1985-ஆம் ஆண்டுக்கு பிறகு 32 ஆண்டுகளுக்கு பிறகு மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று அது வர்ணிக்கப்பட்டது.

அப்போது, மெக்சிகோ, குவாட்டமாலா, எல் சால்வடோர், கோஸ்டா ரிக்கா, நிகரகுவா, பனாமா, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், மெக்சிகோவின் தலைநகரில் கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். மக்களின் தொலைபேசிகளும் இயங்கவில்லை.

No comments

Powered by Blogger.