Header Ads



மஹிந்தவுக்கு எதிராக, விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது - விஜயதாஸ

மஹிந்த அரசு செய்ததாகக் கூறப்படும் ஊழல், மோசடிகளை விசாரிப்பதற்கு விசேட நீதிமன்றமொன்று அமைக்கப்பட வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில்அவ்வாறான விசேட நீதிமன்றமொன்றை நியமிப்பதற்கு அரசமைப்பில் இடமில்லை என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:

முன்னைய அரசு (மஹிந்த அரசு) செய்ததாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் பற்றிய விசாரணைகளை இந்த அரசே தாமதப்படுத்தியது. 

அரசியல் தலையீடே அந்தத் தாமதத்துக்குப் பிரதான காரணம். நீண்ட தாமதத்தின் பின் திடுதிப்பென விசேட நீதிமன்றமொன்றை அமைத்து இந்தக் குற்றச்சாட்டுகள் துரிதமாக விசாரிக்கப்பட வேண்டுமென அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. 

அத்தகைய நீதிமன்றமொன்றை அமைக்க வேண்டுமென்றால் தற்போதுள்ள அரசமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டும். 

அல்லது பிரதம நீதியரசரும் சட்டமா அதிபரும் இணக்கம் தெரிவித்தால் 'ட்ரயல்அட்பார்' நீதிமன்றமொன்றின் முன்னிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படலாம்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும், பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகாவும் விசேட நீதிமன்றமொன்று அமைக்கப்பட வேண்டுமென விடாப்பிடியாக இருக்கின்றார்கள்.

பல்வேறு அரசியல் தலையீடுகளின் காரணமாகவே முன்னைய அரசின் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணைகள் தாமதமாகியிருப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஏற்கனவே தெரிவித்திருக்கின்றார்.

அத்துடன், புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம் விசேட நீதிமன்றம் பற்றி ஜனாதிபதி ஆலோசனை கேட்ட போது அவ்வாறான நீதிமன்றமொன்றுக்கு அரசமைப்பில் இடமில்லை எனவும், 

தேவையானால் விசாரணைகளைத் துரிதப்படுத்த தற்போதுள்ள சட்டங்களின்படி நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் அவர் பதிலளித்திருக்கின்றார்.

எனவே, எந்தக் கோணத்தில் பார்த்தாலும் விசேட நீதிமன்றமொன்றை அமைப்பதற்கான சாத்தியங்கள் அறவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.