புத்தளத்தில் குப்பை கொட்ட வேண்டாம்
கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளம் அறுவைக்காடு பிரதேசத்தில் கொட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் அங்கு குப்பை கொட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை கைவிடுமாறு அரசாங்கத்திடம் தாம் வேண்டுகோள் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் தற்போது குப்பை பிரச்சினை நிலவுகிறது. குறித்த பிரதேசத்தில் குப்பை கொட்டும்போது அப்பிரதேச மக்கள் எதிர்ப்பினைத் தெரிவிக்கின்றனர். எனவே எதிர்ப்பு கிளம்பும்போது வேறொரு இடத்தில் குப்பை கொட்டுகின்றனர். எனவே இவ்வாறு இடமாற்றுவதன் மூலம் மாத்திரம் குப்பைப் பிரச்சினை தீர்ந்துவிடப்போவதில்லை. எனவே மக்களுக்குப் பாதகமில்லாத வகையில் குப்பை முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்டுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ள புத்தளம் அறுவைக்காடு பிரதேசமானது, அப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கிய வகிபாகமுள்ள பகுதியாகும். அப்பிரதேசத்தை பொன்பரிப்புபற்று” என மக்கள் அழைக்கின்றனர். எனவே அந்த பொன்பரிப்பு மண்ணை குப்பை பரப்பும் மண்ணாக மாற்றக்கூடாது என அரசாங்கத்திடம் வேண்டிக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment