பரபரப்பான சூழலில் ஐ.தே.கவின் செயற்குழு கூட்டம் - அதிரடி தீர்மானங்கள் எடுக்கப்படுமா..?
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டம் இன்றைய தினம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெறவுள்ளது.
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு எதிரான குரல்கள் ஐ.தே.கவுக்குள் வலுப்பெற்றுள்ள நிலையில், அவரின் அமைச்சுப் பதவியைப் பறிப்பதற்கான தீர்மானம் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் சாத்தியம் காணப்படுகின்றது என கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் குறித்த அமைச்சரவையின் இரகசியத்தை வெளிட்டமை, மஹிந்த அரசின் காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள 100இற்கும் அதிகமான முறைப்பாட்டு அறிக்கைகளின் விசாரணைகள் மந்தகதியில் இடம்பெறுகின்றமை ஆகியவற்றை சுட்டிக்காட்டியே விஜயதாஸ ராஜபக்சவின் அமைச்சுப் பதவியை உடன் பறிக்குமாறு ஐ.தே.கவின் உறுப்பினர்கள் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையிலேயே, இன்றைய தினம் நடைபெறவுள்ள ஐ.தே.கவின் மத்திய செயற்குழுக் கூட்டம் அரசியல் அரங்கில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, தேசிய அரசின் பிரதான பங்காளிக் கட்சிகளில் ஒன்றான சு.கவுடன் ஐ.தே.கவுக்கு ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விசேடமாக கலந்துரையாடப்படவுள்ளது என அறியமுடிகின்றது.
ஐ.தே.க. தனித்து ஆட்சியமைக்கவேண்டும் என்று இவ்வருடத்தின் ஆரம்பம் முதல் கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் தலைமைப்பீடத்துக்கு கடும் அழுத்தம் கொடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே, இன்று நடைபெறவுள்ள ஐ.தே.கவின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அதிரடியான சில தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என்றும் அக்கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களிலிருந்து மேலும் அறியமுடிகின்றது.
Post a Comment