சயனைட் கலந்த ஊசியினால், மரண தண்டனை கைதி சமிந்தவை, கொலைசெய்யும் திட்டம் அம்பலம்
(எம்.எப்.எம்.பஸீர்)
பாரத லக்க்ஷமன் பிரேமசந்திர படுகொலை வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான தெமட்டகொட சமிந்தவை கொலை செய்ய வகுக்கப்பட்டுள்ள இரகசியத் திட்டம் அம்பலமாகியுள்ளது. துபாயிலிருந்து போதைப் பொருள் வர்த்தகம் செய்யும் மாகந்துரே மதூஷ் தனது போதைப் பொருள் இராச்சியத்தை தக்க வைத்துக் கொள்ள இந்தக் கொலையை செய்ய திட்டமிட்டுள்ளமை தொடர்பிலான தகவல்கள் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை நீர்கொழும்பு – குரண பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் பிடிக்கப்பட்ட ஆயுதக் குழுவிலிருந்த கடற்படையிலிருந்து தப்பிச் சென்ற மாகந்துரே மதூஷின் வலது கரமான வஜிரவின் கீழ் செயற்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் ரந்தீவை பொலிஸார் கைது செய்துள்ள நிலையிலேயே இந்த இரகசியங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன.
களனி விசேட புலனாய்வுப் பிரிவும் பேலியகொட விஷேட குற்றத் தடுப்புப் பிரிவும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையிலேயே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மேற்படி இரகசியத் திட்டம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
தெமட்டகொட சமிந்தவுக்கு எதிராக புதுக் கடை நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும் புளூமென்டல் பகுதியில் வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பிலான வழக்குக்கு அவர் அழைத்து வரப்படும் போது சிறைச்சாலை பஸ் வண்டியை மறித்தோ அல்லது புதுக்கடை நீதிவான் நீதிமன்ற வளாகத்திலோ வைத்து இந்தக் கொலை திட்டத்தை அரங்கேற்ற திட்டம் தீட்டப்பட்டுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சயனைட் விஷம் கலந்த ஊசி மூலமோ அல்லது துப்பாக்கிச் சூடு நடத்தியோ இந்தக் கொலையை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பிலான தயார்படுத்தல்களாக பொலிஸ் பரிசோதகர்கள் அணியும் சீருடையை ஒத்த சீருடை தொகுதி ஒன்றும் ரீ 56 ரக துப்பாக்கி ஆகியவற்றையும் ரந்தீவின் கள்ளக் காதலியின் வீட்டில் மறைத்து வைத்திருந்த போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தோட்டாக்கள் மெகசின் மற்றும் 3 கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
Post a Comment