குர்ஆன் வசனத்தை கூறிய ரவி, எதிர்க்கிறார் அநுரகுமார
ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியிலிருந்து விலகியிருந்தாலும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு சட்டரீதியாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது.
அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பது மோசடிக்கு வழங்கப்பட்ட தண்டனை அல்ல. இலஞ்ச ஊழல் சட்டம், குற்றத்தை மறைக்கும் சட்டம், சட்டவிரோத பணப்பரி மாற்றச் சட்டம் போன்வற்றின் கீழ் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும். எனவே வெளியாகியிருக்கும் தகவல்களுக்கு அமைய சட்டரீதியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்தக் கருத்துக்களை வலியுறுத்தினார்.
"பதவி விலகியுள்ள ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக அரசாங்கம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காமல், மோசடியை மூடி மறைப்பதற்கு முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர்கள் பலர் ரவி கருணாநாயக்கவை முன்னுதாரணமாகக் கொள்ளுமாறு கூறுகின்றனர். எனினும், மோசடிக்காரர்களை முன்னுதாரணமாக எடுக்க வேண்டாம் என பாடசாலை மாணவர்களிடம் நாம் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.
பொது மக்களின் பணத்தை மோசடிசெய்து அகப்பட்டு, அது தொடர்பில் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட பின்னர் மேற்கொண்ட பதவி விலகலை முன்னுதாரணமாகக் கொள்ள முடியாது. இது நல்ல அரசாங்கத்தின் கொள்கையாகவும் இருக்க முடியாது.
அதேநேரம், மோசடியில் ஈடுபடுபவர்கள் தப்பித்துக் கொள்வதற்காக மதங்களில் காணப்படும் விடயங்களை மேற்கோள்காட்டிப் பேசுவதற்கு இடமளிக்க வேண்டாம் என மதத் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இவ்வாறான செயற்பாடுகளால் மக்கள் ஏமாந்து விடக்கூடாது. அது மாத்திரமன்றி மோசடிக்காரர்கள் தமது பிள்ளைகள், மனைவிமாரை முன்நிலைப்படுத்தி, உணர்வுகளை வெளிக்காட்டி அதன் பின்னால் ஒளிந்து கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். விமல் வீரவன்சவின் கைது, யோசித்த ராஜபக்ஷவின் கைது மற்றும் ரவி கருணாநாயக்கவின் பதவி விலகல் போன்றவற்றின் இதனைக் காண முடிகிறது.
நாமல் ராஜபக்ஷ சிறையிலிருந்து வெளியேறும் போது திறந்த வாகனத்தில் இரு கரங்களையும் கூப்பிக் கொண்டு செல்வதைப் பார்த்தபோது ரஜனிகாந்தின் திரைப்படத்தின் காட்சியைப் போல இருந்தது. ஜோன்ஸ்டன் பெர்னான்டோ சிறையிலிருந்து சென்ற வாகனத்தில் மக்கள் ஏற முயற்சித்ததைப் பார்க்கும்போது ஜெயலலிதாவின் வாகனத்தை மக்கள் சூழ்ந்துகொண்டதைப் போன்று இருந்தது. இவ்வாறான சம்பவங்களால் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ரவி கருணாநாயக்கா தனது அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது சத்தியம் வந்தது, அசத்தியம் ஒழிந்தே தீரும் என கூறியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
do not look everything thru religion..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete