Header Ads



காசாவில் ஹமாஸுக்கு எதிராக தற்கொலை தாக்குதல்

பலஸ்தீன காசா பகுதியின் எகிப்து நாட்டு எல்லையை ஒட்டி இடம்பெற்ற மோதல் ஒன்றில் ஹமாஸ் காவலர் ஒருவரும் போட்டி குழுவைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

எகிப்து மற்றும் காசா பகுதிகளுக்கு இடையில் ஜிஹாதி சலபிகள் என்று அழைக்கப்படும் ஆயுதக் குழுவினரின் நடமாட்டத்தை தடுக்க காசாவை ஆளும் ஹமாஸ் எல்லைப் பகுதியில் ரோந்து நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. காசா எல்லையை ஒட்டிய எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) என்று அழைத்துக் கொள்ளும் குழுவினர் எகிப்து இராணுவத்துடன் போராடி வருகின்றனர்.

“எல்லையை அணுகிய இரு நபர்களை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தடுத்து நிறுத்தினார். அப்போது ஒருவர் குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டார். அங்கிருந்த மற்றைய நபர் காயமடைந்தார்” என்று காசாவின் உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் ஹமாஸ் பாதுகாப்பு படை வீரர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அங்கு உயிரிழந்துள்ளார்.

காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக தற்கொலை தாக்குதல் ஒன்று இடம்பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதில் தற்கொலை தாக்கதல் நடத்திய நபர் சலபி குழு ஒன்றின் உறுப்பினர் என்று பாதுகாப்பு தரப்புகள் குறிப்பிட்டுள்ளன.

சினாயில் இயங்கும் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதாக ஹமாஸ் மீது குற்றம் சாட்டிய எகிப்து அதன் காசா எல்லையை தொடர்ந்து மூடியிருந்தது.

ஹமாஸ் இந்த குற்றச்சாட்டை நிராகரித்து வந்தது. இந்நிலையில் எகிப்துடனான உறவை மேம்படுத்தும் முயற்சியில் ஹமாஸ் அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

ஐ.எஸ் மற்றும் அல் கொய்தாவுடன் தொடர்புபட்ட காசாவில் இயங்கும் சலபிக்கள் சர்வதேச புனிதப் போருக்கு ஆதரவானவர்களாவர்.

கடந்த 2007 தொடக்கம் காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பு சலபிக்களுக்கு எதிராக கடுமையாக செயற்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் பல சலபி உறுப்பினர்களையும் கைது செய்த ஹமாஸ், ஆயுதங்களை தேடி அடிக்கடி சுற்றிவளைப்புகளிலும் ஈடுபட்டு வருகிறது. 

No comments

Powered by Blogger.