Header Ads



அசாதாரண நிலை, கிழக்கு பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டது.

மாணவர் போராட்டத்தால் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதால் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகம் வியாழக்கிழமை முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் நண்பகல் 12 மணிக்கு பின்னர் மாணவர்கள் நடமாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு முன்னதாக அனைத்து உடமைகளுடன் வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வழமைக்கு மாறான சூழ்நிலையை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக கவுன்சில் கூடி இந்த முடிவை எடுத்துள்ளதாக துனை வேந்தர் கலாநிதி த.ஜெயசிங்கம் கூறியுள்ளார்.

"இத் தீர்மானத்தின்படி திரிகோணமலை வளாகம் தவிர வந்தாறுமூலை வளாகம் மற்றும் மட்டக்களப்பு மருத்துவ பீடம் ஆகியன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும்," என்று அவர் கூறினார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் அனைத்து மாணவர்களுக்கும் விடுதி வசதி வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்து இரு மாதங்களுக்கும் மேலாக ஆர்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்கள் போராட்டத்தின் ஒரு வடிவமாக கடந்த வாரம் நிர்வாகக் கட்டடத் தொகுதியை முற்றுகையிட்ட மாணவர்கள், தொடர்ந்து இரவும் பகலும் அங்கே தங்கியிருந்தனர். இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு நெருக்கடி நிலை எற்பட்டது. bbc

No comments

Powered by Blogger.