கடற்படைத் தளபதியாக, ட்ராவிஸ் சின்னையா
றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதியாக, அடுத்தவாரம் நியமிக்கப்படவுள்ளார்.
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வரும் 22ஆம் நாளுடன் ஓய்வுபெறவுள்ளார்.
அதேவேளை, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான, ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவும், வரும் 21ஆம் நாளுடன் ஓய்வு பெறவுள்ளார்.
இந்தநிலையில், வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதியாக றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
1982ஆம் ஆண்டு சிறிலங்கா கடற்படையில் இணைந்து கொண்ட றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, விடுதலைப் புலிகளுடனான போரில் அதிக அனுபவங்களைக் கொண்ட ஒரே மூத்த அதிகாரியாவார்.
2007-2008 காலப்பகுதியில், விடுதலைப் புலிகளின் 10 ஆயுதக்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்ட தாக்குதல்களுக்கு றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவே தலைமை தாங்கியிருந்தார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அரசியல் பழிவாங்கல் அச்சத்தினால், நாட்டை விட்டு வெளியேறிய றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், மீண்டும் கடற்படையில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment