Header Ads



மைத்திரி முன், ரணிலுக்கு சந்திரிக்கா வழங்கிய சான்றிதழ்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் பிரதமரின் பெயரை குறிப்பிட்டு அவதூறு செய்கின்ற போதும், பிரதமர் ரணில் மோசமான பதில் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுவே நாட்டுத் தலைவர்களிடம் நாம் எதிர்பார்க்கும் ஒழுக்கமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நான்கு தசாப்தகால அரசியல் வாழ்க்கையில் முக்கியமான தருணங்களை சித்தரிக்கும் கண்காட்சியின் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்காலத்தை காணும் ரணில் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உரையாற்றுகையில்,

பிரதான கட்சிகள் இரண்டின் தலைவர்கள் குறுகிய கட்சி அரசியல் எல்லைகளுக்கு அப்பால் சென்று இணக்கப்பாட்டு அரசாங்கத்தை அமைக்க முடிந்துள்ளது.

இதில் பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும், இரு தலைவர்களும் ஆச்சரியமான விதத்தில் மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளார்கள்.

இங்கு எமது கட்சியைச் சேர்ந்த சிலர் கட்சியின் விதிமுறைகளையும் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக மரபுகளையும் மீறி மோசமான முறையில் நடந்து கொள்கிறார்கள்.

அவர்கள் பிரதமரின் பெயரை குறிப்பிட்டு அவதூறு செய்கிறார்கள். ஆனால் பிரதமர் மோசமான பதில் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. இதுவே நாட்டுத் தலைவர்களிடம் நாம் எதிர்பார்க்கும் ஒழுக்கமாகும்.

பிரதமர் மிகவும் முதிர்ச்சியான தலைவராக நிதானமான முறையில் நாட்டின் முன்னேற்ற பயணத்திற்கு உரமூட்டுகிறார். இவ்வாறு நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியுமென நாம் நம்புகிறோம்.

ஜனாதிபதியும் தமது தரப்பில் முதிர்ச்சியாக கையாளுகிறார். இரு முனைகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் இருவர் மக்கள் நலனுக்காக வாதப்பிரதி வாதங்களை மறந்து செயற்படுகிறார்கள்.

இது ஏனைய ஆசிய நாடுகளில் காண முடியாத அபூர்வமான நிலமை என்றும் சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.