மாகாணத் தேர்தலை, ஒருபோதும் பிற்போட முடியாது - மஹிந்த தேசப்பிரிய
அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்துவதைக் காரணம் காட்டி கால எல்லை முடியும் மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒருபோதும் பிற்போட முடியாது என்று தேர்தல்கள் ஆணையகம் அரசின் உயர்மட்டத்தினருக்கு வலியுறுத்தியுள்ளது என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல்கள் ஆணையாளர் இந்த உத்தியோகபூர்வ தகவலை வழங்கியுள்ளார்.
அடுத்த மாதம் வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் ஆயுட்காலம் முடிவடையவுள்ளது.
தேர்தல் செலவை அடிப்படையாகக் கொண்டு அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடத்தும் வகையில் 20 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் குறித்து அரச தரப்பில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
எனினும், கால எல்லை முடிவடையும் மாகாண சபைகளின் தேர்தலை ஒரு போதும் பிற்போட முடியாது என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கூட 20 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளிப்பதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
20 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி 2019 ஆம் ஆண்டு அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதில் அரசு குறியாகவுள்ளது.
ஆனால், சில காரணங்களைக் காட்டி கால எல்லை முடிவடையும் மாகாண சபைகளின் தேர்தலை ஒருபோதும் பிற்போட முடியாது என்று அரசின் பிரதான இரண்டு பங்காளிக் கட்சிகளுக்கும் உத்தியோகபூர்வமாகத் தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
Post a Comment